‘சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்’ பெற்றோர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை

சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2017-09-02 22:45 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறியுள்ளார்.

 கடந்த சில நாட்களாக ‘புளூவேல் கேம்’ என்ற வார்த்தையை நம்மில் பலரும் கடந்து வந்திருக்கிறோம். நமது 6–வது விரலாக செல்போன் மாறிப்போன இந்த காலத்தில் நமது வசதிக்காக பயன்படுத்தி வந்த சாதனங்கள் உயிர்கொல்லியாக மாறுவதை தடுப்பது அவசியம்.

‘புளூவேல் கேம்’ அல்லது ‘புளூவேல் சேலஞ்ச்’ எனப்படும் ஆன்–லைன் விளையாட்டு நம் அன்றாடம் பயன்படுத்தும் சமூக வலைதளங்கள் மூலம் விளையாடப்படுகிறது. இதில் நிர்வாகியாக செயல்படுபவர் இடும் கட்டளைகளை தினசரி நிறைவேற்றி அடுத்த கட்டத்திற்கு போகச்செய்யும்.

வெளிநாடுகளில் பலர் உயிரிழக்க காரணமாக இருந்த இந்த விளையாட்டு தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் இந்த விளையாட்டு பிரபலமாகி உள்ளது. இவர்கள் தங்கள் உடலில் காயங்கள் ஏற்படுத்திக்கொள்ளவும், தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.

ஆகவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒவ்வொரு பெற்றோர்களும் விழிப்புடன் இருந்து உங்களது குழந்தைகளை காக்க வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் குழந்தைகள் சமூக வலைதளங்களில் பங்கேற்பின் அவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். குறிப்பிட்ட வயது வரை சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்