மாணவி அனிதா சாவுக்கு பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தான் காரணம் விஜயகாந்த் குற்றச்சாட்டு

மாணவி அனிதா சாவுக்கு பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தான் காரணம். அரசியல் நாடகத்தால் அவர்களால் ‘நீட்’ தேர்வை தடுக்க முடியவில்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

Update: 2017-09-03 00:30 GMT

வாணியம்பாடி,

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடியில் தே.மு.தி.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி வழங்கும் விழா நடந்தது. விழாவில் 500 பேருக்கு குர்பானி பொருட்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

இயன்றதை இல்லாதவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கொள்கையில் பொதுமக்களுக்கு தே.மு.தி.க. சேவை செய்து வருகிறது. நான் ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து வருகிறேன்.

வேலூர் மாவட்டம் எனக்கு பிடித்த மாவட்டம். அதிகமான வெயில் உள்ள பகுதி என கூறுவார்கள். ஆனால் சிப்பாய் கலகம் உருவான இடம். வேலூரில் உள்ள கோட்டை பிடித்திருக்கிறது. என் மனைவி ஊரும் இந்த மாவட்டம்தான். அதேபோல் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிடிக்கும்.

மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும் ‘நீட்’ விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக கூட்டு சேர்ந்து விட்டன. தாங்கள் 5 ஆண்டு முழுவதும் ஆட்சி செய்ய வேண்டும் என்பதற்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும் ‘நீட்’ தேர்வை அ.தி.மு.க. அரசு தடுக்கவில்லை.

இதனால்தான் அரியலூர் மாவட்ட மாணவி அனிதா பிளஸ்–2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவ கல்லூரியில் சேரமுடியவில்லை. இதனால் இம்மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது மிகவும் கொடுமையானது. அனிதாவின் தற்கொலைக்கு பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அரசுகள்தான் காரணம். எனவே வரும் தேர்தல்களில் மத்திய உள்ள பா.ஜ.க.வுக்கும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க.வுக்கும் ஒருபோதும் வாக்களிக்க கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்