வாலாஜா அருகே மின்சாரம் தாக்கியதில் அக்காள்–தம்பி பலி

வாலாஜா அருகே மின்சாரம் தாக்கி அக்காள்–தம்பி பரிதாபமாக செத்தனர். மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2017-09-02 23:00 GMT

வாலாஜா,

வேலூர் மாவட்டம், வாலாஜாவை அடுத்த தலங்கை பெரிய தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜெயா (வயது 45). இவர்களது வீடு மிகவும் பள்ளமான இடத்தில் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையால் அந்த தெருவில் தண்ணீர் தேங்கியிருந்தது. நேற்று தெருவில் உள்ளவர்கள் அந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அவ்வாறு வெளியேறிய தண்ணீர், பள்ளமாக காணப்படும் இவர்களது வீட்டு முன்பு தேங்கி நின்றது.

வீட்டின் முன்பு மின்சார வயர் செல்கிறது. வீடு தாழ்வாக இருப்பதால் தொட்டுவிடும் தூரத்தில் மின்கம்பி உள்ளது. நேற்று காலை ஜெயா, துணிகளை துவைத்தார். அதனை உலர வைப்பதற்காக வீட்டின் முன்பு கம்பி ஒன்றை கட்டினார். இந்த நிலையில் மின்கம்பியும், துணி உலர்த்துவதற்காக கட்டிய கம்பியும் உரசியது. ஏற்கனவே அந்த இடம் ஈரமாக இருந்ததால் துணிகள் உலர போடுவதற்கு கட்டியிருந்த கம்பியிலும் மின்சாரம் கசிந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் துவைத்த துணிகளை உலர்த்துவதற்காக ஜெயா, அவர் கட்டிய கம்பி மீது போட்டார். அப்போது அதில் ஏற்கனவே கசிந்து கொண்டிருந்த மின்சாரம் ஜெயா மீது பாய்ந்தது. அவர் அலறியபடியே சுருண்டு விழுந்தார்.

சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது தம்பி சீனிவாசன் (37), ஜெயா உடல் மீது மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதை அறியாமல் அவரை தூக்க முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

மேலும் அங்கு வந்த முரளி மற்றும் விக்னேஷ் ஆகியோரும் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டனர். இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரம் தாக்கி பலியான ஜெயா மற்றும் அவரது தம்பி சீனிவாசன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பலியான சீனிவாசன் ஒழுகூர் கிராமத்தில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 1½வயதில் ஆண் குழந்தை உள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் அக்காளும், தம்பியும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்