நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-02 22:30 GMT
திருவாரூர்,

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா. இவர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடி வந்தார். இந்த நிலையில் நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காததால் மனமுடைந்த அனிதா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக திருவாரூர் அருகே கொரடாச்சேரியில் அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சுடர்வளவன் தலைமை தாங்கினார். இதில் நகர செயலாளர் தமிழழகன், மாநில துணை செயலாளர் அறவானன், நிர்வாகிகள் சதீஷ், பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது நீட்தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கூடாது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதே போல திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கணேஷ், மாவட்ட துணைச்செயலாளர் சுஜாதா, நகர செயலாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் சந்திரசேகரஆசாத், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகரசெயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் நீட் தேர்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். பாராளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தங்கசுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் செந்தில், ரஜினி, நகர செயலாளர் ஜான்மைக்கேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நீட் தேர்வினால் அரியலூர் மாணவி அனிதா மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை எனக்கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மன்னார்குடி அரசு மருத்துவமனை எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சுரேஷ், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் பார்வேந்தன், தொகுதி துணை செயலாளர் ஆதவன், ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், நகர செயலாளர் அறிவுகொடி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு மற்றும் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

நீட் தேர்விற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய மாணவி அனிதா, தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும. நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அந்த கட்சியின் ஒன்றிய செயலாளர் நடேச. தமிழார்வன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சந்துரு முன்னிலை வகித்தார். இதில் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய- மாநில அரசுகளை அவர்கள் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்