மாணவி அனிதா தற்கொலை: ராமேசுவரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மணல் சிற்பம் உருவ பொம்மையை எரித்து போராட்டம்

அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நீட் தேர்வுக்கு எதிராகவும் மணல் சிற்பம் அமைக்கப்பட்டு உள்ளது. நீட் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது.

Update: 2017-09-02 23:30 GMT
ராமேசுவரம்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ படிப்பில் சேர முடியாததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் அனிதா தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், இறந்து போன மாணவி அனிதாவின் இறப்புக்கு மத்திய-மாநில அரசுகளின் அலட்சியமே காரணம் எனக்கூறியும் நேற்று ராமேசுவரத்தில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் மாநில பொதுசெயலாளர் கண்இளங்கோ தலைமையில் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நகர் தலைவர் ராசு, நகர் செயலாளர் ஜெயகாந்தன், பொருளாளர் ரமேஷ், நகர் இளைஞரணி தலைவர் குட்டிமணி, ஆட்டோ சங்க தலைவர் ரீஜன், மாணவர் கூட்டமைப்பு தலைவர் சதீஷ், ராஜிவ்காந்தி உள்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கோஷம் போட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென கட்சியினர் நீட் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் உள்ளிட்ட போலீசார் உருவபொம்மையை தண்ணீர் ஊற்றியும் அணைத்தனர்.

இதே போல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பரமக்குடி வேந்தோணி கிராமத்தை சேர்ந்த அரசுபள்ளி ஆசிரியர் சரவணன் மருத்துவ படிப்பில் நீட் தேர்வை நுழைக்காதீர் என்பதை வலியுறுத்தியும், இறந்து போன மாணவி அனிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும் நேற்று மணல் சிற்பத்தால் டெலஸ்கோப் வரைந்து அதில் தமிழ் , ஆங்கிலத்தில் நீட்டை நுழைக்காதீர் என்ற வாசகங்களையும் எழுதியிருந்தார். மேலும் மணல் சிற்பத்தில் நீட் தேர்வால் இறந்துபோன மாணவி அனிதாவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மணலால் அந்த சிற்பத்தில் மாணவியின் பெயரையும் வரைந்திருந்தார்.

இந்த சிற்பத்தின்முன் நின்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் கதிர்வேல், மாநில துணை தலைவர் சதிஷ், மாநில இணை செயலாளர் முகிலன், மாவட்ட நிர்வாகிகள் சுந்தரம், அண்ணாதுரை, வக்கீல் டோம்னிக்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பொதுமக்களும், பள்ளி மாணவ-மாணவிகளும் அனிதாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.

ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வடகொரியா தலைமையில் ஏராளமான பெண்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்