சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு ஒரேநாளில் 4 குழந்தைகள் பலி பெற்றோர், உறவினர்கள் கதறல்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு ஒரே நாளில் 4 குழந்தைகள் பலியானார்கள். பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

Update: 2017-09-02 01:30 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் ‘டெங்கு’ காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாறி வரும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக்குறைபாடுகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்பட்டு உள்ளது. தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும்

குறிப்பாக சேலம் மாவட்டத்தில் ஓமலூர், காடையாம்பட்டி, ஜலகண்டாபுரம், எடப்பாடி, தாரமங்கலம், மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதியிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு பாதிப்புக்கு ஆளாகினர். அவர்களில் பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வீடு திரும்பினர். ஆனால், 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர்.

டெங்கு மற்றும் காய்ச்சல் கண்டுள்ளவர்கள் தினமும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டனர்.

இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்களில், ஒரே நாளில் 5 மாத குழந்தை உள்பட 4 குழந்தைகள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மர்ம காய்ச்சலுக்காக சேலத்தை சேர்ந்த அப்பாதுரை என்பவரது 2 வயது குழந்தை தீபக்குமார், சேலம் தாதகாப்பட்டி செல்லக்குட்டி காடு பகுதியை சேர்ந்த ராகவேந்திரன் என்பவரது 2 வயது குழந்தை பவன்குமார் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் தீபக்குமாருக்கு மூளைக்காய்ச்சல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தீபக்குமார், பவன்குமார் ஆகிய 2 குழந்தைகள் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. குழந்தைகளின் உடலை பார்த்து பெற்றோர் கண்ணீர் வடித்தனர்.

இதேபோல சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த செந்தில் என்பவரது 5 வயது குழந்தை கார்த்திகேயன், விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்த அய்யன்துரை என்பவரின் 5 மாத பெண் குழந்தை சஞ்சனா ஆகியோரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அக்குழந்தைகள் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தன. குழந்தைகள் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இறந்த குழந்தைகளை இரவோடு இரவாக ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுப்பி வைத்து விட்டதாகவும், ஆஸ்பத்திரியில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் கண்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கைவசதி இல்லாததால், தரையில் படுக்கும் நிலையிலும், சில படுக்கையில் 2 குழந்தைகளை படுக்க வைப்பதாகவும் குழந்தைகளின் பெற்றோர் குற்றம்சாட்டினர்.

மேலும் செய்திகள்