நல்லம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலி

நல்லம்பள்ளி அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.

Update: 2017-09-01 23:30 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள ஒடசல்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி சத்யா. சரவணன் சென்னையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சத்யாவும் சென்னையில் கணவருடன் தங்கியுள்ளார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் திவிஜாஸ்ரீ (வயது 7).

இவள் நல்லம்பள்ளி அருகே நேருநகர் சவுளுப்பட்டி முல்லை நகரில் உள்ள தனது தாத்தா துரை வீட்டில் தங்கி, தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் திவிஜாஸ்ரீ கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமடையவில்லை. இதையடுத்து மாணவிக்கு டாக்டர்கள் ரத்த பரிசோதனை செய்து பார்த்தனர். அதில் அவளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து திவிஜாஸ்ரீ பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள். கடந்த மாதம் 17-ந் தேதி டெங்கு காய்ச்சலுக்கு பிரேம் குமார் என்ற வாலிபர் உயிரிழந்தார். இந்த நிலையில் டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படுவதில்லை. இதனால் கொசுத்தொல்லை அதிக அளவில் உள்ளது. கொசுமருந்தும் அடிக்கப்படுவதில்லை. எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்