வாஷிந்த் ரெயில் நிலையத்தில் பயணிகளின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
வாஷிந்த் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்சார ரெயில்களை இயக்கக்கோரி பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
மும்பை,
வாஷிந்த் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட மின்சார ரெயில்களை இயக்கக்கோரி பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
மின்சார ரெயில் சேவை முடக்கம்மத்திய ரெயில்வே வழித்தடத்தில் டிட்வாலா– கசாரா இடையே வந்து கொண்டிருந்த நாக்பூர்– மும்பை தூரந்தோ எக்ஸ்பிரஸ் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில், அந்த ரெயிலின் என்ஜின் மற்றும் 9 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. இருப்பினும் இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
இந்த விபத்தின் காரணமாக டிட்வாலா– கசாரா இடையே மின்சார ரெயில் சேவை முற்றிலுமாக முடங்கியது. தடம்புரண்ட ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டு, தண்டவாளம் சீரமைக்கப்பட்ட பின்னரும் டிட்வாலா– கசாரா இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை.
பயணிகள் மறியல்மாறாக அந்த வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இவ்விரு ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக நிறுத்தப்பட்டு வந்தன. இது மின்சார ரெயில் பயணிகளுக்கு மிகுந்த கோபத்தை உண்டாக்கியது.
இந்தநிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் வாஷிந்த் ரெயில் நிலையத்தில் திரண்டிருந்த பயணிகள் நிறுத்தப்பட்ட மின்சார ரெயில்களை இயக்கக்கோரி தண்டவாளத்தில் குதித்து அந்த வழியாக வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை வழி மறித்து நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.
பயணிகளின் திடீர் போராட்டம் காரணமாக வாஷிந்த் ரெயில் நிலையத்தில் பரபரப்பு உண்டானது. மேலும் அந்த வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் பாதிப்பு உண்டானது. அந்த ரெயில்கள் 20 நிமிடங்கள் வரையிலும் தாமதமாக சென்றன.