மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அசோக்குமார் எம்.பி. கூறினார்.

Update: 2017-09-01 22:34 GMT
கிருஷ்ணகிரி,

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் பிரதமரின் சபதம் மூலம் சாதிப்போம், புதிய இந்தியா சிந்தனை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அசோக்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். முதுநிலை விஞ்ஞானி சுந்தர்ராஜ் வரவேற்றார். இதில் விஞ்ஞானிகள் சுபாகரன், மோகன், ரமேஷ்பாபு, தொழில்நுட்ப வல்லுனர்கள் குணசேகரன், ரமேஷ், பூமதி, முகமது இஸ்மாயில், முன்னாள் நகராட்சி துணை தலைவர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் புதிய இந்தியா குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த கருத்தரங்கில் பையூர் மண்டல ஆராய்ச்சி மைய தலைவர் தமிழ்செல்வன், துணை பேராசிரியர் விஜயகுமார், உதவி வேளாண்மை இயக்குனர் பச்சையப்பன், தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) சீனிவாசன், உதவி பொது மேலாளர் நஸ்ரீன் சலீம் மற்றும் விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் அசோக்குமார் எம்.பி. பேசியதாவது:-

ஒவ்வொரு தனி மனிதனும் சபதம் ஏற்று சாதித்து காட்ட வேண்டும். விவசாயிகளின் உற்பத்தியை இருமடங்காக உயர்த்தும் வகையில் பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுத்து உள்ளார். அதன்படி நமது நாடு விவசாய தொழிலை சார்ந்துள்ளது. விவசாயிகள் இருமடங்கு உற்பத்தியை உயர்த்தும் வகையில் மண்ணின் தன்மையை அறிந்து இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும். மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, விவசாயிகளுக்கு 100 சதவீதம் சொட்டு நீர்பாசன திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற கூட்ட தொடரில் மாவிற்கு நிரந்தர விலை கிடைக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கூடுதல் லாபம் பெற வழிவகை செய்ய வேண்டும். தென்னையில் பூச்சிநோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும். தோட்டக்கலை பயிர்கள் அதிக விளைச்சல் தர வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் தொழில் நுட்ப வல்லுனர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்