தாராவியில் தொடர் மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி கும்பர்வாடாவில் சாலை மறியல்

தாராவியில் தொடர்மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை கண்டித்து பொதுமக்கள் கும்பர்வாடாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-09-01 22:25 GMT

மும்பை,

தாராவியில் தொடர்மின் தடையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை கண்டித்து பொதுமக்கள் கும்பர்வாடாவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அவதி

மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால் நகர் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. குறிப்பாக தாராவி பகுதியில் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் பலத்த மழை காரணமாக தாராவியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மழை நின்று 3 நாட்கள் ஆன பிறகும் தாராவியின் பல பகுதிகளில் மீண்டும் மின்வினியோகம் தொடங்கப்படவில்லை. இதனால் இந்திராநகர், லாத்தூர் கல்லி, சிவசக்திநகர், கும்பர்வாடா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

தூங்காத குழந்தைகள்..

இது குறித்து லாத்தூர் கல்லி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் கூறியதாவது:–

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் எங்கள் பகுதியில் மின்வினியோகம் இல்லை. மிக்சி, கிரைண்டர் பயன்படுத்த முடியாமல் வீட்டில் சமையல் செய்ய முடியவில்லை. படிக்கும் பிள்ளைகள் இரவில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து படிக்கின்றனர்.

மின்விசிறி இல்லாமல் குழந்தைகள் தூக்கமின்றி இரவு முழுவதும் அழுகின்றன. அதை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.

சாலை மறியல்

இதுபோக மின்விளக்கு இல்லாமல் குறுகிய எங்கள் சந்தில் நடந்து செல்ல கூட முடியவில்லை. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உள்ளது. இது குறித்து பலமுறை பெஸ்ட் மின் வினியோக கழகத்தினருக்கு புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை.

இவ்வாறு அவர் வருத்ததுடன் கூறினார்.

இந்தநிலையில் கும்பர்வாடா பகுதியில் தொடர் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கு இருந்து கலைந்துபோகச் செய்தனர். மேலும் அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்