ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அந்தேரி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் கைது

புகார்தாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அந்தேரி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Update: 2017-09-01 22:13 GMT

மும்பை,

புகார்தாரரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அந்தேரி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

லஞ்சம்

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது சகோதரியிடம் ஒரு ஆண்டுக்கு முன்னர் ரூ.9 லட்சம் கடன் வாங்கியிருக்கிறார். இந்த கடன் தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை உண்டாகி தகராறு ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த நபர் அந்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்.

இந்த புகார் மீது போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் மேகா பாம்ரே என்பவர் விசாரணை நடத்தினார். இந்தநிலையில், புகார் கொடுத்த நபரை அழைத்து பேசிய சப்–இன்ஸ்பெக்டர் மேகா பாம்ரே தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் உங்களுக்கும், சகோதரிக்கும் உள்ள பிரச்சினையை பேசி தீர்த்து வைப்பதாக கூறியிருக்கிறார்.

சப்– இன்ஸ்பெக்டர் கைது

இதைக்கேட்டு புகார் கொடுத்தவர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அவர் அங்குள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். லஞ்சஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனையின்பேரில் அந்த நபர் சப்–இன்ஸ்பெக்டர் மேகா பாம்ரேவை போலீஸ் நிலையத்தில் வைத்து சந்தித்து ரூ.10 ஆயிரம் மட்டும் கொண்டு வந்திருப்பதாக கூறி அவரிடம் பணத்தை கொடுத்தார்.

அந்த பணத்தை வாங்கி பையில் வைத்தபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மேகா பாம்ரேவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்