வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கமலக் கண்ணன் தெரிவித்தார்.

Update: 2017-09-02 00:30 GMT
காரைக்கால்,

காரைக்காலை அடுத்த செருமாவிலங்கையில் உள்ள ஜவகர்லால் நேரு அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதிய இந்தியா சிந்தனை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விவசாயிகளுக்கு சம்பா முன் பருவம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்குக்கு கலெக்டர் கேசவன் தலைமை தாங்கினார். அமைச்சர் கமலக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, விவசாயிகளுக்கு மாடித்தோட்டம் அமைப்பதற்கு தேவையான இடு பொருட்கள் மற்றும் உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், பஜன் கோவா வேளாண் கல்லூரி முதல்வர் கந்தசாமி, கூடுதல் வேளாண் இயக்குனர் மதியழகன் மற்றும் வேளாண் அதிகாரிகள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் கமலக் கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘வறட்சியால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட விவசாயிகளுக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் அறிவித்த நிவாரணத்துடன், பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாகவும் கணிசமான தொகையையும் சேர்த்து விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என்றார். 

மேலும் செய்திகள்