அசல் ஓட்டுனர் உரிம உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வாடகை வாகன உரிமையாளர்கள்
அசல் ஓட்டுனர் உரிம உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாடகை வாகன உரிமையாளர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருப்பூர்,
தமிழகம் முழுவதும் உள்ள வாகன ஓட்டுனர்கள் தங்கள் கையில் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகருக்குட்பட்ட வாடகை வாகன உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலக வாசலில் நின்று முற்றுகையிட்டு அறிவிப்பு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் மனு ஒன்றையும் கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய அசல் ஓட்டுனர் உரிமத்தையும், வாகன ஆவணங்களின் அனைத்து அசல்களையும் கையில் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசின் உத்தரவானது சிறு வாகன உரிமையாளர்கள் முதல் கனரக வாகன உரிமையாளர்கள் வரை அனைவரின் வாழ்வுரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அசல் ஓட்டுனர் உரிமம் காணாமல் அல்லது தொலைந்து போனாலோ மீண்டும் அதை பெறுவதற்கு காவல் நிலையம், ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு சென்று பல சிரமங்களுக்கு மத்தியில் பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் அசல் ஓட்டுனர் உரிமம், அசல் ஆவணங்கள் தொலைந்து போனால் அதை பெறும்வரை வாகனங்களை இயக்கி தொழில் செய்ய இயலாத நிலை உருவாகும். அதனால் வாடகை ஓட்டுனர்கள் மற்றும் சிறு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும்.
வாகனங்களின் அசல் ஆவணங்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு நிதிநிறுவனங்களிலோ, வங்கிகளில் கடன் பெற்றதினால் வங்கிகளின் பாதுகாப்பில் தான் இருக்கும். இந்த நிலையில் இந்த உத்தரவானது மேலும் கடும் சிக்கலை உருவாக்கும். நிதி நிறுவனத்தினர், ஒரு சில வாகனங்களை வைத்திருக்கும் சிறு உரிமையாளர்களை கடும் நெருக்கடியில் தள்ளி பணம் பறிக்கவும், இருக்கின்ற வாகனங்களை இழக்கும் சூழலுக்கும் இந்த உத்தரவு கொண்டு செல்கிறது. எனவே தமிழக அரசின் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். ஏற்கனவே உள்ள நடைமுறையை கடைபிடிக்க ஆவண செய்ய பரிந்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.