புதிய இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டார்

சென்னையில் நடந்த புதிய இந்தியாவை உருவாக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியில் மத்திய ஜவுளி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டார்.

Update: 2017-09-02 00:00 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க. சார்பில் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என கல்லூரி மாணவ–மாணவிகள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மத்திய ஜவுளி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:–

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75–வது ஆண்டு விழாவை தற்போது நாடு கொண்டாடி கொண்டிருக்கின்றது. 75 ஆண்டுகளுக்கு முன் இந்த காலக்கட்டத்தில்தான் நாட்டின் சுதந்திரத்திற்காக மாணவர்கள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அன்றைய வலிமை வாய்ந்த பிரிட்டிஷ் அரசை எதிர்த்து குரல் கொடுத்தனர். அவை அனைத்துமே நம் இந்திய தேசத்தின் விடுதலை என்ற ஒரே குறிக்கோளை நோக்கி இருந்தது.

உறுதியும், கடின உழைப்பும் இருந்தால் அடிமட்டத்தில் இருப்பவர்கள் உயர்ந்த இடத்தை அடைவார்கள் என்பதற்கு நமது பிரதமர் மோடியே சிறந்த உதாரணம். இது தான் இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு.

குஜராத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவரை அவரது தாயார் வீட்டு வேலை செய்து கஷ்டப்பட்டு ஆளாக்கினார்.

‘டீ’ விற்பனையாளராக இருந்த அவர் உறுதியாலும் கடின உழைப்பாலும் நாட்டின் பிரதமராக உயர்ந்திருக்கிறார் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

இதேபோல் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரும் இந்திய ஜனநாயகத்தின் சிறப்பால் சாதாரண நிலையில் இருந்து உயர்ந்த பதவியை அடைய முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கின்றனர்.

75 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டிற்காக தியாகம் செய்தவர்களின் புகழை நாம் காக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் நாட்டின் சட்டத்திட்டத்திற்கு கட்டுப்பட்டு சிறந்த குடிமகனாக வாழ்வோம் என்ற உறுதிமொழியை எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனை தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உறுதிமொழியை வாசிக்க மாணவ–மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழகவேந்தர் ஐசரிகணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்