அசல் ஒட்டுனர் உரிமம் வைத்திருக்க உத்தரவு: 3 அசல் ஆவணங்களை ஹெல்மெட்டில் ஒட்டி வந்து போலீசாரிடம் காட்டிய வாலிபர்
அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து 3 அசல் ஆவணங்களை ஹெல்மெட்டில் ஒட்டி வந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் ‘உங்களுக்கு எது வேண்டுமோ அதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
கோவை,
அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து 3 அசல் ஆவணங்களை ஹெல்மெட்டில் ஒட்டி வந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் ‘உங்களுக்கு எது வேண்டுமோ அதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
வாகன ஓட்டுனர்கள் 1–ந் தேதி(நேற்று) முதல் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அசல் உரிமம் வைத்திருக்காவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இருந்தபோதிலும் கோவையில் வாகனங்களில் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று அசல் ஒட்டுனர் உரிமத்தை கொண்டு வந்திருந்தனர். அரசின் உத்தரவை தொடர்ந்து கோவையின் பல்வேறு இடங்களில் நேற்று போக்குவரத்து போலீசார் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா? என்று சோதனை நடத்தினார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்தை காண்பித்து விட்டு சென்றனர். ஒரு சிலர் வைத்திருக்கவில்லை. அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
கோவை வ.உ.சி. பூங்கா மைதானம் அருகே நேற்று காலை 11 மணியளவில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த ஆலாந்துறையை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 35) தனது ஹெல்மெட்டின் மேல் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் அசலை ‘டேப்’ போட்டு ஒட்டி வந்தார். அவரை பார்த்ததும் போலீசார் அவரது வாகனத்தை நிறுத்தினார்கள். அப்போது ராஜேந்திரன், போலீசாரிடம்,‘ நீங்கள் எப்போது எந்த ஆவணத்தை கேட்பீர்கள் என்று தெரியவில்லை. அதனால் தான் எல்லா ஆவணங்களின் அசலையும் ஒட்டி வந்துள்ளேன். உங்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
இதைக் கேட்டு சிரித்த போக்குவரத்து போலீசார் ராஜேந்திரனின் ஓட்டுனர் உரிமத்தை சரிபார்த்து அனுப்பி வைத்தனர். இவ்வாறு பல வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர வாகனங்களில் ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் ஆவணங்களை ஒட்டி வந்து போலீசாரிடம் காண்பித்தது வேடிக்கையாக இருந்தது.
கோவையின் பெரும்பாலான இடங்களில் போலீசார் நேற்று வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா? என்று சோதனை நடத்தினார்கள். அதை வைத்திருக்காதவர்களை எச்சரித்து அனுப்பினார்கள். ஆனால் பகல் 12 மணியளவில் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்தது. அதன் எதிரொலியாக போலீசார் வாகன ஓட்டிகளிடம் சோதனை நடத்துவதை நிறுத்திக் கொண்டனர்.