தாம்பரம்–பல்லாவரம் பகுதிகளில் 4 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை சாலையில் வெள்ளம் பாய்ந்தது

தாம்பரம், பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் நேற்று 4 மணி நேரத்துக்கு அதிகமாக மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பாய்ந்து ஓடியது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Update: 2017-09-01 22:45 GMT

தாம்பரம்,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தொடர்ந்து 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே சென்னையில் பல இடங்களில் வானில் கருமேகங்கள் திரண்டு இருந்தன. சிறிது நேரத்தில் மழை பெய்யத்தொடங்கியது.

சென்னையை அடுத்த தாம்பரம் பல்லாவரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், செம்பாக்கம், அனகாபுத்தூர்,பம்மல் உள்பட புறநகர் பகுதிகளில் நேற்று காலை 6.30 மணி முதல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக அந்த பகுதியில் கொட்டித்தீர்த்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை நேரத்தில் பெய்த இந்த பலத்த மழையால் பள்ளி–கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ–மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தாம்பரம் முடிச்சூர் சாலையில் நெடுஞ்சாலை துறையினரின் மழைநீர் கால்வாய் பணிகள் முற்றிலும் நிறைவடையாததால் பைபாஸ் சாலை மேம்பாலம் முதல் கிருஷ்ணாநகர் வரை முடிச்சூர் சாலையில் சுமார் 3 அடி உயரத்திற்கு மழைநீர் சாலையில் தேங்கிநின்றது. இதனால் அப்பகுதியில் வந்த வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக முடிச்சூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜமீன் பல்லாவரம் பகுதியில் தர்காரோடு சாலையை 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை குண்டும்– குழியுமாக உள்ளது. மழைபெய்ததால் இந்த சாலையை பயன்படுத்தாத நிலை ஏற்பட்டது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் மழைநீர் தேங்கிய சாலையில் இறங்கி நேற்று திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் பின்னர் பல்லாவரம் நகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்