கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை திருமணமான 1½ வருடத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமான 1½ வருடத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2017-09-01 20:30 GMT

கோலார் தங்கவயல்,

திருமணமான 1½ வருடத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

டிரைவர்

கோலார் தங்கவயல் பேத்தமங்களா மரக்கல்லு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் சுவேதா(வயது 22). இவருக்கும் பேத்தமங்களா நியூடவுன் பகுதியைச் சேர்ந்த டிரைவரான ருத்ரேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு(2016) பிப்ரவரி மாதம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு சுவேதா தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார். ருத்ரேஷ் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்தார். திருமணத்தின்போது ருத்ரேஷ் கேட்ட வரதட்சணையை சுவேதாவின் குடும்பத்தார் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமணம் முடிந்த 4 மாதங்களுக்கு பிறகு ருத்ரேஷ், சுவேதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினார். அதையடுத்து சுவேதா தனது பெற்றோரிடம் இருந்து ரூ.3½ லட்சம் கூடுதல் வரதட்சணை வாங்கிக் கொடுத்தார்.

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை

இந்த நிலையில் மீண்டும் ருத்ரேஷ் தனது மனைவி சுவேதாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த தொடங்கினார். அதற்கு அவருடைய தந்தை சீனிவாஸ், தாய் ஜெயம்மா ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ரமேஷ் தனது மகளிடம் பேசுவதற்காக அவரை செல்போனில் தொடர்பு கொண்டார்.

அப்போது சுவேதா போனை எடுக்கவில்லை. மாறாக அவருடைய மாமனார் சீனிவாஸ் எடுத்துள்ளார். அப்போது அவர் திடீரென சுவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுவேதாவின் தந்தை ரமேசும், குடும்பத்தாரும் ருத்ரேசின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் சுவேதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். சுவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அவர்களுக்கு தெரியவந்தது.

போலீசில் புகார்

பின்னர் இந்த சம்பவம் குறித்து பேத்தமங்களா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுவேதாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதையடுத்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சுவேதாவின் பெற்றோர் பேத்தமங்களா போலீசில் ஒரு புகார் செய்தனர். புகாரில், தங்களது மகளிடம் அவளுடைய கணவன் சுரேஷ், மாமனார் சீனிவாஸ், மாமியார் ஜெயம்மா ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், அதனால்தான் அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், அதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

தாசில்தார் மேல்விசாரணை

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவேதாவின் கணவர் ருத்ரேஷ், மாமனார் சீனிவாஸ், மாமியார் ஜெயம்மா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுவேதாவுக்கு திருமணமாகி 1½ வருடமே ஆவதால் இச்சம்பவம் குறித்து பங்காருபேட்டை தாசில்தார் சத்திய பிரகாசும் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்