தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து கவர்னர் உரிய நேரத்தில் முடிவெடுப்பார்: கிரண்பெடி பேட்டி

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து தமிழக கவர்னர் சரியான நேரத்தில் சட்டத்திற்குட்பட்டு முடிவெடுப்பார் என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தெரிவித்தார்.

Update: 2017-09-02 00:30 GMT

மதுரை,

இந்திய குற்றவியல் கழக மதுரைக்கிளை மற்றும் மதுரை சமூக அறிவியல் கல்லூரி சார்பில் குற்றவியல் தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கு 2 நாட்கள் நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு குற்றத்தடுப்பில் சமுதாயத்தின் பங்கு என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நாம் வாழும் பகுதிகளில் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், காவல்துறை அதிகாரிகள், அடுத்த நிலை உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கலாம். நேரில் செல்லும் போது புகாரை ஏற்க மறுத்தால், காவல்துறை மின்னஞ்சலுக்கு புகார் அனுப்பலாம்.

சமூகத்தில் மக்களும் ஒரு வகையில் காவலர்களே. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால், பெண்கள் பயமின்றி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும். குற்றங்கள் தொடர்பாக தொடர்ந்து புகார் அளிக்கும் போது தான் குற்றங்கள் தொடராமல் தடுக்கப்படும். குற்றங்களை கண்டு கொள்ளாமல் விடுவதும் ஒருவகை குற்றமே.

ஊழல் என்பது ஒரு நோய். அந்த நோய் பரவாமல் தடுக்கப்பட வேண்டும். தேசப்பற்று, சமூகப்பணி, நேர்மை ஆகிய மூன்றையும் தாரக மந்திரமாக கொண்டு செயல்படும்போது மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். இந்த மூன்றையும் ஏற்று மாணவர்கள் உறுதியுடன் செயல்படத் தொடங்கினால் உலக அரங்கில் இந்தியாவின் நிலை உயரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக கிரண்பெடி செய்தியாளர்களிடம் கூறும்போது, ஒவ்வொரு துறைக்கும் சட்ட திட்டங்கள் உண்டு. அதை யாரும் மீறக்கூடாது. மக்கள் பணியில் இருக்கும்போது நேரம் பார்த்து பணிபுரிய முடியாது. புதுச்சேரியில் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தின் மூலம் முடிந்த பணிகளைச் செய்து வருகிறேன்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கேற்ப தமிழக கவர்னர் தான் முடிவெடுக்க வேண்டும். இது ஒரு சவாலான பணி தான். எனினும் தமிழக கவர்னர் சரியான நேரத்தில் சட்டத்திற்குட்பட்டு முடிவெடுப்பார் என்றார்.

மேலும் செய்திகள்