நாகர்கோவிலில் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

நாகர்கோவிலில் ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Update: 2017-09-01 23:00 GMT

மதுரை,

நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் மகேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் இறந்தார். சில நாட்கள் கழித்து அவரது உருவத்தை மணல் சிற்பமாக நாகர்கோவில் வடசேரி பகுதியில் எம்.ஜி.ஆர். சிலையின் அருகில் நெடுஞ்சாலை நடுவில் கன்னியாகுமரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் விஜயகுமார் அமைத்தார். அந்த சிற்பத்தை சுற்றிலும் தடுப்புகள் வைத்தும், கூரை அமைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாநில நெடுஞ்சாலையின் நடுவில் ஜெயலலிதா மணல் சிற்பம் அமைந்து உள்ளதால் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே மணல் சிற்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 22.2.2017 அன்று புகார் மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனுவை பரிசீலித்து ஜெயலலிதா மணல் சிற்பத்தை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, "ஜெயலலிதா மணல் சிற்பத்துக்கு அருகில் அண்ணா சிலை போன்றவை உள்ளன. ஆனால் மனுதாரர் அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதா மணல் சிற்பத்தை மட்டும் அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இது பொதுநல வழக்காகாது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதாடினார்.

இதனையடுத்து, "நீதிமன்றத்தை அரசியல் சண்டைகளுக்காக பயன்படுத்தாதீர்கள். பொதுநலனுக்காக வழக்கு தொடர்ந்திருந்தால் இடையூறாக இருக்கும் அனைத்து சிலைகளையும் அகற்றக்கோரியிருக்க வேண்டும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்