நாகர்கோவிலில் பிரபல திருடர்கள் 2 பேர் கைது

மும்பை ஜெயிலில் இருந்து தப்பி வந்து குமரி மாவட்டத்தில் கைவரிசை காட்டிய பிரபல திருடர்கள் 2 பேர் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2017-08-31 23:25 GMT
நாகர்கோவில்,

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22). இவர் மீது குமரி மாவட்டத்தில் வடசேரி போலீஸ் நிலையத்தில் 5 திருட்டு வழக்குகளும், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகளும் உள்ளன.

2015-ம் ஆண்டு நாகர்கோவில் என்.ஜி.ஓ.காலனியில் ஒரு கார் திருட்டு வழக்கில் போலீசார் இவரை கைது செய்தனர். அப்போது, மணிகண்டனின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு ஏராளமான திருட்டு பொருட்கள் மற்றும் நகைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவை அனைத்தும் மீட்கப்பட்டன.

அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்த மணிகண்டன் மும்பை சென்றார். அங்கும் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியதாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்தபோது மணிகண்டனுக்கும், அதே சிறையில் இருந்த சேலத்தை சேர்ந்த டேவிட் என்ற தேவேந்திரன் (23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. டேவிட் மும்பை பாண்டூப் பகுதியில் வசித்து வந்தார். இவர் மீதும் திருட்டு வழக்குகள் உள்ளன. இதற்காக மும்பை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

சிறை பழக்கம் மூலம் நண்பர்களான மணிகண்டனும், டேவிட்டும் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் தீட்டினார்கள். அதைத் தொடர்ந்து கடந்த 1 மாதத்துக்கு முன்பு 2 பேரும் சிறையில் இருந்து தப்பினர். பின்னர் அங்கிருந்து 2 பேரும் தலைமறைவானார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டாரில் சந்தேகப்படும்படியாக 2 பேர் ஆட்டோவில் மது குடித்துக்கொண்டு இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். ஆனால் வரும் வழியில் 2 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் பிரபல திருடன் டேவிட் என்பதும், தப்பி ஓடியவர் மணிகண்டன் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து டேவிட்டிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் நேற்று காலை இடலாக்குடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மடக்கி விசாரணை நடத்தியபோது அவர், தப்பி ஓடிய மணிகண்டன் என்பது தெரியவந்தது.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுபற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாசிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மணிகண்டன், டேவிட் என்ற தேவேந்திரன் ஆகிய 2 பேருமே பிரபல திருடர்கள். குமரி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த பல்வேறு திருட்டு சம்பவங்களை இவர்கள் தான் அரங்கேற்றியுள்ளனர். ஆரல்வாய்மொழியில் கோவில்களில் உண்டியல் பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டு, அழகப்பபுரம் மற்றும் கொட்டாரத்தில் வங்கியில் திருட முயற்சி, வீட்டில் நகை திருடியது என்பன உள்பட பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளது. அழகப்பபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியில் திருடுவதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமரா ஒயரை இவர்கள் அறுத்துள்ளனர். அப்போது அலாரம் ஒளித்ததால் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். மணிகண்டன் மீது 2012-ல் இருந்தே திருட்டு வழக்குகள் இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து மணிகண்டனையும், டேவிட்டையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் திருடி வைத்திருந்த 3 மோட்டார் சைக்கிள்கள், 3 பவுன் நகை மற்றும் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
தாதாக்களுடன் தொடர்பா?

கைது செய்யப்பட்டுள்ள 2 பேர் மீதும் மும்பையிலும் பல்வேறு வழக்குகள் இருப்பதால் மும்பை தாதாக்களுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க கோட்டார் போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்