அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில், அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-08-31 23:00 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கு ஆவணங்களை பெறுவதற்கும், தொலைந்து போன ஆவணங்கள் குறித்து புகார் அளிப்பதற்கும் புதிய இணையதள வசதி தொடங்கப்பட்டடு உள்ளது. அதன்படி பொதுமக்கள்
http://eservices.tnpolice.gov.in
என்ற இணையதளம் மூலம் ஆவணங்களை பெறலாம். இந்த வசதியை தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் நேற்று காலை தொடங்கி வைத்தார். உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் முன்னிலை வகித்தார்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்டத்தில் சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டு தொகையை விரைவாக பெற்றுக் கொள்ள உதவும் வகையில் இந்த வசதி தொடங்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகள் இந்த வசதியின் மூலம் ஆவணங்களை பெறலாம்.

புலன் விசாரணையின் போது போலீசில் பதிவு செய்யப்பட்ட அவர்களின் செல்போன் எண்ணை அடிப்படையாக கொண்டு பயனீட்டாளருக்கு அனுமதி வழங்கப்படும். ஒரு ஆவணத்துக்கு நெட்பேங்க் வசதியை பயன்படுத்த ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதலாக பதிவிறக்கம் செய்த ஆவணத்தின் நகல் பயனீட்டாளரின் மின்னஞ்சல் கணக்குக்கு தானாக அனுப்பப்படும். அரசு இ-சேவை மையத்துடன் இந்த சேவையை ஒருங்கிணைப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

மேலும் சில ஆவணங்கள் தொலைந்தால், அதனை இந்த இணைதளம் மூலம் பதிவு செய்யலாம். இதன் மூலம் பாஸ்போர்ட், வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் தொலைந்தால் போலீசில் புகார் அளித்து ஒப்புதல் பெறும் செயல்முறை எளிமையாக்கப்பட்டு உள்ளது. இதில் மனுதாரரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ரகசிய குறியீடு அடிப்படையில் அங்கீகாரம் உறுதி செய்யப்படும். ஆதார் அட்டை, பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவையான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு தொலைந்த ஆவண அறிக்கை மனுதாரருக்கு கிடைக்கும்.

புளூவேல் என்னும் இன்டர்நெட் விளையாட்டை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். மாணவர்கள் அந்த விளையாட்டில் ஆர்வம் காட்டக்கூடாது. கம்ப்யூட்டர் மையங்களில் இந்த விளையாட்டு பதிவிறக்கம் செய்யப்படுகிறதா? என்பது கண்காணிக்கப்படும். அவ்வப்போது திடீர் சோதனையும் நடத்தப்படும். மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் 100 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

நாளை(அதாவது இன்று) முதல் அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்து இருக்க வேண்டும். உரிமம் தொலைந்து விட்டால் வாகனம் ஓட்டக்கூடாது. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்