களக்காடு அருகே 2 பேர் சாவு: கணவன்-மனைவி தகராறில் மதுவில் விஷம் கலக்கப்பட்டதா?

களக்காடு அருகே மது குடித்த 2 பேர் இறந்தனர். கணவன்-மனைவி தகராறில் மதுவில் விஷம் கலக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2017-08-31 22:43 GMT
களக்காடு,

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ உப்பூரணியை சேர்ந்தவர் இன்பமணி(வயது 40), ஆடு மேய்க்கும் தொழிலாளி. அதே ஊரை சேர்ந்த தர்மராஜ் மகன் தங்கராஜ்(28), கட்டிட தொழிலாளி. இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள்.

கடந்த 24-ந் தேதி காலையில் ஊருக்கு அருகே உள்ள ஊருணியில் அமர்ந்து ஒன்றாக மது குடித்தனர். வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில், மது குடித்த 2 பேரையும் முதலுதவி சிகிச்சைக்காக சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், இருவரும் குடித்த மதுவில் விஷம் கலந்துள்ளதாக கூறியதாக தெரிகிறது. இருவரது உடல் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகுதான் விஷம் கலந்தது பற்றிய உறுதியான தகவல் தெரிய வரும் என்று போலீசார் கூறினர்.

இதற்கிடையே தங்கராஜின் தாய் ஜெபகனி களக்காடு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், இன்பமணிக்கும், அவருடைய மனைவி பாக்கியலட்சுமிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

மதுகுடித்த இன்பமணியும், என்னுடைய மகனும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்தனர். அப்போது நாம் குடித்த மதுவில், என்னுடைய மனைவி விஷம் கலந்து இருக்கலாம் என்று இன்பமணி, என்னுடைய மகனிடம் கூறியதாக உறவினர்கள் சிலர் கூறினர். எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி என்னுடைய மகன் சாவுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்பமணி, தங்கராஜ் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்