மும்பை– புனே நெடுஞ்சாலையில் கார் பள்ளத்தில் பாய்ந்து என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலி
மும்பை– புனே நெடுஞ்சாலையில் கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலியாகினர்.
மும்பை,
மும்பை– புனே நெடுஞ்சாலையில் கார் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பலியாகினர். பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வந்தபோது, இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
என்ஜினீரியங் மாணவர்கள்மும்பை தார்டுதேவ் பகுதியை சேர்ந்தவர் கேவின் கப்பாடியா(வயது22). இவரது நண்பர் பாரக்(20). இருவரும் என்ஜினீயரிங் மாணவர்கள். நேற்று முன்தினம் கேவின் கப்பாடியாவிற்கு பிறந்தநாள் ஆகும். இதனை கொண்டாடுவதற்காக அவர், பாரக் உள்பட நண்பர்கள் 8 பேருடன் லோனாவாலாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார்.
பின்னர் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு, அங்கிருந்து கேவின் கப்பாடியா, பாரக் உள்பட 5 பேரும் ஒரு காரில் புறப்பட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அந்த கார் மும்பை– புனே நெடுஞ்சாலை கன்டாலா அருகே வந்தபோது, அங்குள்ள ஒரு வளைவில் திரும்பியது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு சுவரில் மோதி அங்குள்ள 150 அடி ஆழ பள்ளத்திற்குள் பாய்ந்தது.
2 பேர் பலிஇதில், கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி கேவின் கப்பாடியா மற்றும் பாரக் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற 3 பேர் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த லோனாவாலா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் துடித்துக்கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.