தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து நல்லாட்சிக்கான கூட்டு இயக்கத்தை உருவாக்கி உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல அமைப்புகள் ஒன்றிணைந்து நல்லாட்சிக்கான கூட்டு இயக்கத்தை உருவாக்கி உள்ளது. இதில் துறைமுகம் தூர்வாரும் பணியில் சரிவர நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறி அரசுக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் நல்லாட்சிக்கான கூட்டு இயக்கம் சார்பில் முறையிடப்பட்டது.
இதனால் தூர்வாரும் பணி தடைபட்டுள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சோலை நகரில் உள்ள இயக்க ஒருங்கிணைப்பாளரும், அரசு ஊழியர் சம்மேளனத்தின் கவுரவத் தலைவருமான பாலமோகனின் வீட்டுக்கு சிலர் சென்று பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்துள்ள வழக்கை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் சீத்தாராமன், சி.ஐ.டி.யு. முருகன் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.