எம்.எல்.ஏ. பதவியே எங்களுக்கு தேவை இல்லை தங்க தமிழ்செல்வன் ஆவேசம்

எம்.எல்.ஏ. பதவியே எங்களுக்கு தேவை இல்லை என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.

Update: 2017-09-01 00:15 GMT

புதுச்சேரி,

ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அ.தி.மு.க.வை கூறுபோட விடமாட்டோம் என முதல்–அமைச்சர் பேசி இருப்பது நியாயமற்றது. அரசு விழாவில் இப்படி பேசி இருப்பது தவறான நடைமுறை. அதிகாரத்தை வைத்து எதையும் சாதிக்கலாம் என்பது நடக்காத காரியம்.

கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தினகரனால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் தான் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இருவரும் தற்போது அவருக்கு துரோகம் செய்கின்றனர். எனவே துரோகிகள் இந்த நாட்டை ஆள வேண்டுமா? துரோகிகளிடம் நல்லதை எதிர்பார்க்க முடியாது.

இவர்கள் எப்படி மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க முடியும். எங்களுக்கு எம்.எல்.ஏ. பதவியே தேவையில்லை. முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக எம்.எல்.ஏ.க்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான அழைப்பு எங்களுக்கு இல்லை. எங்களை புறக்கணித்து கூட்டம் கூட்டவேண்டிய அவசியம் என்ன? இந்த கூட்டத்திற்கும் அவர்கள் நினைப்பதுபோல் எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இணைந்து சொகுசாக உள்ளனர். ஒற்றுமையை நிலைநாட்டி திட்டங்களை கொண்டு செல்வதற்கான செயல்பாடு அவர்களிடம் இல்லை. ஆட்சியை தக்கவைக்கவே கவனம் செலுத்துகின்றனர். ஆனால் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை. நிச்சயமாக முதல்–அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அகற்றப்பட வேண்டியவர். எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்வோம்.

ஜனாதிபதி திருப்பதியில் இருந்து டெல்லி திரும்பிய பின் நாங்கள் அவரை சந்திப்போம். அமைச்சர் உதயகுமார் நேரத்திற்கு தகுந்தபடி பேசி வருகிறார். அவர் தான் சசிகலா முதல்–அமைச்சராக வர வேண்டும் என்று ஜெயலலிதா சமாதி முன்பு தீர்மானம் நிறைவேற்றியவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சுந்தர்ராஜ் எம்.எல்.ஏ. விடுதியைவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘எங்கள் அணியில் உள்ள யாரும் இதுவரை அணி மாறவில்லை, இனியும் மாறமாட்டார்கள். சுந்தர்ராஜ் டி.டி.வி.தினகரனை சந்திக்க சென்னை சென்றுள்ளார்’’ என்றார்.

மேலும் செய்திகள்