வழக்கு தொடர்பான ஆவணங்களையும், தொலைந்த ஆவணங்கள் பற்றியும் புகார் அளிக்க வசதியாக புதிய இணையதள சேவை அறிமுகம்

வழக்கு ஆவணங்களையும் தொலைந்து போன ஆவணங்கள் பற்றி புகார் அளிக்க வசதியாக புதிய இணையதள சேவையை போலீஸ் கமி‌ஷனர் தொடங்கி வைத்தார்.

Update: 2017-08-31 22:45 GMT

திருப்பூர்,

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகவும், தொலைந்து போன ஆவணங்கள் பற்றிய புகார் அளிக்க வசதியாக புதிய இணையதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணையதள சேவையை திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கமி‌ஷனர் நாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார். மாநகர குற்ற ஆவண காப்பக சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா இந்த திட்டம் குறித்து விளக்கி பேசினார்.

பின்னர் இதுகுறித்து போலீஸ் கமி‌ஷனர் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய இழப்பீட்டு தொகையை விரைவாக பெற்று கொள்ள உதவி செய்யும் வகையில் அரசு http://eservices.tnpolice.gov.in என்ற இணையதள சேவை வசதியை தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாலை விபத்து வழக்குகளில் இறந்தவர்களின் சட்ட பிரதிநிதிகள் இந்த வசதியின் மூலம் ஆவணங்களை பெறலாம். புலன் விசாரணையின் போது காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட அவர்களுடைய செல்போன் எண்ணை அடிப்படையாக கொண்டு பயனீட்டாளருக்கு அனுமதி வழங்கப்படும். நெட் பேங்க் வசதியை பயன்படுத்தி ஒரு ஆவணத்திற்கு ரூ.10 செலுத்தி ஆவணங்களை பெற்று கொள்ளலாம்.

கூடுதலாக பதிவிறக்கம் செய்த ஆவணத்தின் நகலானது பயனீட்டாளரின் மின்னஞ்சல் கணக்கிற்கு தானாக அனுப்பப்படும். அரசு இ–சேவை மையத்துடன் இந்த சேவையை ஒருங்கிணைப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. விரைவில் இ–சேவை மையம் மூலம் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். தொலைந்த ஆவணங்கள் பெறுவதற்கான ஆன்லைன் வசதியும் போலீஸ் இணையதளத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பாஸ்போர்ட், வாகனம் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் தொலைந்து போனது பற்றி போலீசாரிடம் புகார் அளித்து ஒப்புதல் பெறும் செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. பயனீட்டாளரின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓ.டி.பி. எண் அடிப்படையில் அங்கீகாரம் உறுதி செய்யப்படும். இதில், ஆதார், பான், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தேவையான தகவல்கள சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தொலைந்த ஆவண அறிக்கை ஒரு தனித்துவமான குறிப்பு எண்ணுடன் உடனடியாக பயனீட்டாளருக்கு அளிக்கப்படும்.

அதே சமயத்தில் இந்த அறிக்கையின் நகலை அவரின் மின்னஞ்சல் கணக்கிற்கு அனுப்பப்படும். ஆவணம் வழங்கும் அதிகாரிகளால் எல்.டி.ஆர்.–ன் உண்மை தன்மையை சரிபார்க்க இணையதளத்தில் ஒரு ஏற்பாடு வழங்கப்பட்டுள்ளது. புகாரின் மீது போலீசில் எந்த விசாரணையும் செய்யவில்லை என்றாலும் போலீஸ் துறைக்கு தவறான தகவல்கள் தருவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோல அசல் ஓட்டுனர் உரிமம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் திருப்பூரில் உள்ள அனைத்து வாகன ஓட்டுனர்களும் இந்த சட்டத்தை மதித்து அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை கமி‌ஷனர்கள் கயல்விழி, பிரபாகரன் மாநகர குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் பதுருநிஷா பேகம் உள்பட போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்