கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக பிரசாந்த் மு.வடநேரே பொறுப்பேற்றார்
கடலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்ட பிரசாந்த் மு.வடநேரே மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதோடு, அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடையவும் நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வந்த ராஜேஷ், தொழில் வர்த்தகத்துறையின் கூடுதல் ஆணையராக சென்னை தலைமை செயலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றி வந்த பிரசாந்த் மு.வடநேரே கடலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் புதிய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நேற்று மாலையில் கடலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சப்–கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்த் மற்றும் அனைத்துதுறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
பின்னர் புதிய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:–
வரலாற்று சிறப்புமிக்க கடலூர் மாவட்டத்தின் கலெக்டராக பொறுப்பேற்றதற்காக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்பு ஓசூரில் சப்–கலெக்டராக ஓராண்டும், 2011 முதல் 2016 வரை 5 ஆண்டுகள் நிதித்துறையின் துணை செயலாளராகவும், 2016 செப்டம்பர் முதல் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராகவும் பணிபுரிந்துள்ளேன்.
இந்த மாவட்ட மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வுகாணவும், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற சில மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கி இருக்கின்றன. உயர்நிலை(எஸ்.எஸ்.எல்.சி.), மேல்நிலை(பிளஸ்–2) கல்வியை மட்டும் முன்னேற்றம் அடைய செய்தால் மட்டும் போதாது. நடுநிலை கல்வியையும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பதை அறிந்து, பின்னர் கல்வியை முன்னேற்றம் அடைய செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால் கடும் வறட்சி நிலவியது. சமீபகாலமாகத்தான் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக இந்த மாவட்டத்துக்கு அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் நல்ல முறையில் நிறைவேற்றி முடிக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர் மாவட்டத்தின் 18–வது கலெக்டராக பொற்றுப்பேற்றுள்ள பிரசாந்த் மு.வடநேரே மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். புனேயில் பி.எஸ்சி. வேளாண்மை பட்டப்படிப்பில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் 2008–ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.
பின்னர் 2009 முதல் 2010–வரை கோவையிலும், 2010 முதல் 2011 வரை ஒசூரிலும் சப்–கலெக்டராகவும், 2011 முதல் 2016 வரை நிதித்துறை துணை செயலாளராகவும், 2016 செப்டம்பர் முதல் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராகவும் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவுக்கு மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவருக்கு மராட்டியம், இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 4 மொழிகள் தெரியும்.