தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கூலி வழங்கக்கோரி தொழிலாளர்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி அருகே தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது எடுத்தவாய்நத்தம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை கண்காணிப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த 4 பணித்தள பொறுப்பாளர்கள் பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக 2 பணித்தள பொறுப்பாளர்களை, வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் ராஜவேல் நியமனம் செய்தார். மேலும் வேலை செய்த தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று கேட்டால், அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என்று கோஷமிட்டபடி எடுத்தவாய்நத்தம் பஸ்நிறுத்தம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் காலை 10 மணி அளவில் கச்சிராயப்பாளையம்– எடுத்தவாய்நத்தம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜவேல், கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித்குமார், வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தொழிலாளர்கள், தங்களுக்கு கடந்த 6 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் பெரிதும் சிரமமடைந்து வருகிறோம். அதனால் உடனே சம்பளம் வழங்க வேண்டும். மேலும் எங்களை கண்காணிக்க ஏற்கனவே 4 பணித்தள பொறுப்பாளர்கள் பணியில் உள்ளனர். இதனால் புதிதாக நியமிக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர்.
அதற்கு அதிகாரிகள், இன்னும் 2 நாட்களில் சம்பளம் வழங்கப்படும். பணித்தள பொறுப்பாளர் நியமனம் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை ஏற்ற தொழிலாளர்கள் காலை 11 மணி அளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கச்சிராயப்பாளையம்– எடுத்தவாய்நத்தம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.