சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அ.தி.மு.க.வுக்கு கவர்னர் உத்தரவிடவேண்டும் கி.வீரமணி பேட்டி

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அ.தி.மு.க.வுக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று ஈரோட்டில் கி.வீரமணி கூறினார்.

Update: 2017-09-01 00:30 GMT

ஈரோடு,

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட பெரியார், அண்ணா சிலைகளை தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் திறந்து வைத்தனர். விழா முடிவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசுக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லை என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தபோதே அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டு இருக்க வேண்டும். ஆனால் அது அவர்களின் உள்கட்சி பிரச்சினை என்று கவர்னர் ஒதுங்கி இருப்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டும் கவர்னர் கேட்கவில்லை. அணிகள் இணைப்பின்போது அவர் கைகளை பிடித்து சேர்த்து வைத்தபோதே ஒரு சாராருக்கு சாதகமாக இருக்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது. எனவே சந்தேகத்துக்கு இடமின்றி அரசியல் சட்டப்படி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் அ.திமு.க.வுக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும்.

மத்திய–மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கு நீடித்தால் தமிழகத்தில் மக்கள் கிளர்ச்சி ஏற்படும்.

இவ்வாறு தி.க.தலைவர் கி.வீரமணி கூறினார்.

முன்னதாக சிலை திறப்பு விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:–

17–9–1971–ல் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டபோது கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன், இங்கே நிற்கிறேன். அன்று சிலையை கருணாநிதி திறந்து வைத்தார். 46 ஆண்டுகளுக்கு பின்னர் அதே சிலை புதுப்பிக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

சிலைகளை மட்டுமல்ல, தந்தை பெரியாரின் கொள்கையும், சீலமும் புதுப்பிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். மத வெறி, ஜாதி வெறி, பதவி வெறி என்ற நோய்களுக்கு பெரியாரும், அண்ணாவும் மாமருந்தாக உள்ளார்கள்.

பெரியார் வாழ்ந்த வீட்டில் அண்ணாவும் வாழ்ந்தார் என்பதால் நினைவு இல்லத்தை தந்தை பெரியார்–பேரறிஞர் அண்ணா நினைவகமாக பெயர் சூட்ட வேண்டும் என்று கூறியவர் அன்னை மணியம்மை. அதை அப்போதைய முதல்–அமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். அத்தகைய நினைவு இல்லத்தை தாண்டி பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார் சிலையும், அண்ணா சிலையும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த தலைவர்களின் கொள்கைகளை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. பெரியாரின் கொள்கைகளை அண்ணா சுமந்து வந்தார். அண்ணாவை தொடர்ந்து கருணாநிதி, அவரைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வருகிறார்கள். இந்த நேரத்தில் தமிழகத்தில் தேவை ஆட்சி மாற்றம் அல்ல. தமிழ் இனத்துக்கு தேவை மீட்சி என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தி.க.தலைவர் கி.வீரமணி கூறினார்.

மேலும் செய்திகள்