நீல திமிங்கல விளையாட்டால் விபரீதம்: செல்போனை பயன்படுத்தும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும்

நீல திமிங்கல விளையாட்டின் விபரீதத்தில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு கம்ப்யூட்டர், செல்போனை பயன்படுத்தும் மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-31 22:30 GMT

அல்லிநகரம்,

ஆன்லைன் விளையாட்டான நீல திமிங்கலம் (புளூவேல்) என்னும் விபரீத விளையாட்டில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடிமையாகி வருகின்றனர். நீல திமிங்கல விளையாட்டு அபாயகரமானதாகும். ஒன்று முதல் 50 கட்டங்களாக பிரித்து விளையாடுகின்றனர். ஆரம்பத்தில் ஒவ்வொரு பகுதியாக விளையாடி முடித்த பிறகு எளிதான தண்டணையை செய்ய சொல்கின்றனர்.

அதன்பின்னர் அந்த விளையாட்டில் முழுமையாக ஈடுபட செய்து, மனதை மாற்றி சொந்தமாக யோசிக்கும் செயல்திறனை இழக்க செய்கின்றனர். தனிமையில் இருப்பதும், யாருடனும் பேசாமல் இருப்பதும், இரவில் தூங்காமல் டி.வி. பார்ப்பதும், கையில் திமிங்கலம் போன்ற உருவத்தினை கீறிக்கொள்வதும் போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவார்கள்.

இறுதி கட்டத்தில் மாடியில் இருந்தோ அல்லது பாலம் போன்ற பகுதிகளில் இருந்தோ குதித்து தற்கொலை செய்ய வைக்கும் அளவுக்கு இந்த விளையாட்டு கொண்டு போய் விடுகிறது. எனவே கம்ப்யூட்டர், செல்போனை பயன்படுத்தும் போது பெற்றோர் உடனிருந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் நடைபெறுகிற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும்.

தமிழ்நாடு போலீஸ் இணையதளம் மூலம் அனைத்து போலீஸ் நிலையங்களும் இணைக்கப்பட்டு உள்ளது. இதில் குற்ற நிகழ்வுகளில் தேடப்படும் நபர்கள், காணாமல் போனவர்கள் பற்றி போலீசார் தெரிந்து கொள்ளலாம். அந்த இணையதளத்தில் புகார் செய்யவும் வசதி செய்யப்பட்டது. இந்த சேவை தமிழகம் முழுவதும் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.

சாலை விபத்தில் சிக்கியவர்கள் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு, ஆவணங்கள் தேவைப்படும். இதற்கு போலீஸ் இணையதள பக்கத்தில் குடிமக்கள் பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் மாவட்டம், போலீஸ் நிலையம், முதல் தகவல் அறிக்கை எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களை குறித்து, ஒரு ஆவணத்துக்கு தலா ரூ.10 வீதம் இணையதளம் மூலமாகவே செலுத்த வேண்டும்.

பின்னர் தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விரைவில் அரசு பொதுசேவை மையங்களிலும் இவற்றை பெற வசதி செய்யப்பட இருக்கிறது. மேலும் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கி ஏ.டி.எம். உள்ளிட்ட ஆவணங்கள் காணாமல் போனாலும் போலீஸ் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இதன் மூலம் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் சென்று விடும். இதனால் அந்த ஆவணத்தை யாரும் பயன்படுத்த முடியாமல் முடக்கி விடுவார்கள். இந்த சேவையை பொதுமக்கள் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்