ரூ.2 லட்சம் மோசடி வழக்கு: கோவை கோர்ட்டில் இடைத்தரகர் சுகேஷ் ஆஜர்

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் என்பவரை டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

Update: 2017-08-31 23:00 GMT

கோவை,

அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் (வயது 35) என்பவரை டெல்லி போலீசார் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். இவர், கடந்த 2010–ம் ஆண்டு கோவை கணபதி பகுதியை சேர்ந்த ராஜவேலு (40) என்பவருக்கு டெண்டர் எடுத்து கொடுப்பதாகக்கூறி ரூ.2 லட்சம் பெற்று மோசடி செய்தார்.

இதுதொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுகேஷ் மற்றும் உடந்தையாக இருந்த அவரது தந்தை சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் சென்றனர். இதுதொடர்பான வழக்கு கோவை 2–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதற்காக, பலத்த பாதுகாப்புடன் டெல்லியில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்ட சுகேஷ், நீதிபதி ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வருகிற 16–ந் தேதி மீண்டும் சுகேஷை ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவரை டெல்லி போலீசார் திகார் சிறைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்