இன்று முதல் அமலுக்கு வருகிறது அசல் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் அபராதம்

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அசல் ஓட்டுனர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் அபராதம் வதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2017-08-31 22:30 GMT

ஊட்டி,

ஊட்டி ஆட்டோ, மேக்சி கேப் மற்றும் வாடகை கார் உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு, அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் ஊட்டியில் உள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பேசியதாவது:–

தமிழகம் முழுவதும் அனைத்து வாகனம் உபயோகிப்பவர்களும் 1–ந் தேதி (இன்று) முதல் தங்களது அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா உத்தரவின் பேரில், அனைத்து வாகன ஓட்டுனர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதை குறைக்கவும், போலி வாகன உரிமம் வைத்து வாகனம் இயக்குபவர்களை கண்டறியவும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கவும், முறையாக ஓட்டுனர் பயிற்சி பெறாமல் வாகனம் இயக்குபவர்களை கண்டறியவும், அதிகளவு பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களை ஒழுங்கு படுத்துவதுடன் வாகனங்கள் மூலம் நடைபெறும் கடத்தல் மற்றும் இதர குற்றங்களை தடுக்க உதவும் வகையில் உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆகவே, ஊட்டி நகரில் லாரி, மினி பஸ், ஆட்டோ, வாடகை வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் இயக்குபவர்கள் தங்களது அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கூட்டத்தில் கலந்துகொண்ட ஆட்டோ, மேக்சி கேப் ஓட்டுனர்கள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய உறுப்பினர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் போலீசார் சோதனையின் போது, வாகன ஓட்டுனர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமம் இல்லையென்றால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதற்கு வாகன ஓட்டுனர்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன் பேசுகையில், அரசு அறிவிப்பின்படி செப்டம்பர் 1–ம் தேதி முதல் அனைத்து வகையான வாகனங்கள் இயக்குபவர்கள் தங்களது ஓட்டுனர் உரிமத்தின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்.

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் போது அவர்களது அசல் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும், அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் லாரி ஓட்டுனர்கள் சங்க பிரதிநிதிகள், வாடகை டாக்சி ஓட்டுனர்கள் என பலர் கலந்து கொண்டனர். இது குறித்து ஓட்டுனர்கள் தெரிவிக்கையில் அசல் உரிமத்தை வைத்துக்கொண்டு வாகனங்களை இயக்குவது என்பது பாதுகாப்பற்றது. உரிமம் தொலைந்து போக வாய்ப்புள்ளது. மீண்டும் புது உரிமம் பெறும் வரை வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்படும். எனவே அரசு இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் அல்லது மறு பரிசீலினை செய்ய வேண்டும். இல்லையெனில் உரிமம் தொலைந்து போனால் உடனடியாக மாற்று உரிமம் வழங்க வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தனி சேவை மையத்தை அமைக்க வேண்டும் என்று தொவித்தனர்.

மேலும் செய்திகள்