அரசியல்வாதிகள் அனைவரும் தவறானவர்கள் கிடையாது ஜி.கே.வாசன் பேட்டி
அரசியல்வாதிகள் அனைவரும் தவறானவர்கள் கிடையாது என்றும், மக்கள் விரோத பணி செய்பவர்கள் மத்தியில் நேர்மையானவர்களும் இருக்கின்றனர் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் த.மா.கா. பிரமுகர் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மாநிலம் முழுவதும் கடந்த 5 மாதங்களாக த.மா.கா. சார்பில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வட்டார, நகர, மாவட்ட நிர்வாகிகளை 32 மாவட்டங்களிலும் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. த.மா.கா. பெரும்பான்மையான மாவட்டங்களில் கணிசமான இடத்தில் தனித்தன்மையோடு செயல்படுகிறது. முறையான இடத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற நல்ல சூழல் ஏற்பட்டு உள்ளது. அப்போது அதிகாரபூர்வமான கூட்டணி குறித்து முறையாக அறிவிக்கப்படும். மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளோடு கூட்டணி வைக்க ஆலோசனை மற்றும் மக்கள் கணிப்பு தொண்டர்களின் எண்ணத்திற்கேற்ப முடிவு எடுக்கப்படும்.
நடிகர் கமலஹாசன் விடுத்த அறிக்கையில் அரசியல்வாதிகள் அரசு கஜானாவை காலி செய்பவர்கள் என்று கூறுகிறார். அரசியல்வாதிகள் அனைவரும் தவறானவர்கள் கிடையாது. மக்கள் விரோத பணி செய்வபவர்கள் மத்தியில் நேர்மையான அரசியல்வாதிகளும் உள்ளனர். ஒருவர் தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் கூற உரிமை உள்ளது. விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசு அலட்சிய போக்கை கடைபிடித்து வருகிறது. மத்திய–மாநில அரசுகள் விவசாயிகளின் கடன்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக பயிர் காப்பீட்டு தொகை முறையாக கிடைக்கவில்லை. அதனை முழுமையாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, முன்னாள் எம்.பி.க்கள் உடையப்பன், ராம்பிரபு, கட்சியின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கம்புணரி சேவுகரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.