உரிமம் பெறாமல் செயல்படும் விடுதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
உரிமம் பெறாமல் செயல்படும் விடுதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிவஞானம் கூறினார்.
விருதுநகர்,
குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடந்தது. பயிற்சியை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்தா£ர். அப்போது அவர் கூறியதாவது:–
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் மேலாளர்களுக்கு, குழந்தைகள் தொடர்பான அனைத்து சட்டங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
தொழிற்சாலைகளில் உள்ள விடுதியில் பல பணியாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவ்வாறு தொழிற்சாலைகளில் விடுதிகள் இருந்தால், அவ்விடுதியினை சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு விடுதியினை பதிவு செய்தால் தான் அங்கு தங்கியுள்ள பணியாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முடியும். தொழிற்சாலைகளிலுள்ள விடுதிகள் அனைத்தும் விடுதிகளுக்கான குறைந்தபட்ச தகுதிகளுடன் செயல்பட வேண்டும்.
பெண் குழந்தைகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் அனைத்தும் உரிமம், பதிவு பெற்று செயல்பட வேண்டும். அவ்வாறு உரிமம் பெறாமல் செயல்படும் விடுதிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறையினை ஒழிக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.