செஞ்சி அருகே பெண் குத்திக்கொலை கள்ளக்காதலை கைவிடாததால் கணவர் வெறிச்செயல்

செஞ்சி அருகே கள்ளக்காதலை கைவிடாததால் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-30 23:30 GMT

செஞ்சி,

செஞ்சி அருகே அனந்தபுரம் காந்திநகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 44). அதே பகுதியில் துரித உணவு கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செங்கேனியம்மாள் (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் மூர்த்தியின் கடைக்கு அவ்வபோது செங்கேனியம்மாள் சென்று வேலை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கும், கடையில் வேலை பார்த்துவந்த தொழிலாளி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாக தெரிகிறது. இதையறிந்த மூர்த்தி செங்கேனியம்மாளை கண்டித்துள்ளார். மேலும் தனது கடையில் வேலைபார்த்து வந்த அந்த தொழிலாளியை நீக்கினார். இருப்பினும் செங்கேனியம்மாள் கள்ளக்காதலை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை இது தொடர்பாக மூர்த்திக்கும் செங்கேனியம்மாளுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சரமாரியாக செங்கேனியம்மாளை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், அனந்தபுரம் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ், சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இறந்த செங்கேனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்