பொள்ளாச்சி பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும், தி.மு.க.வினர் மனு

பொள்ளாச்சி பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று சப்–கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

Update: 2017-08-30 23:15 GMT

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகர தி.மு.க செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் சப்–கலெக்டர் அலுவலகத்திற்கு தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பொருட்களுடன் வந்தனர். பின்னர் அவற்றை தடை செய்யக்கோரி சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரத்தை பெரிதும் பாதிக்கும் குட்கா, பான்பராக் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதித்து அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஆதாரப்பூர்வமாக தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரையில் இதுகுறித்து எந்த மேல்நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை.

பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி முழுவதும் வெளிப்படையாக குட்கா, பான்பராக் உள்பட பல்வேறு போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே சுகாதார துறை மூலம் மேற்கண்ட தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து போதை பொருட்கள் விற்பனை செய்தால் பொதுமக்களுடன், அனைத்து கட்சியினர் சேர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அப்போது நகர துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட தொண்டர் அணி தர்மராஜ், தொழிற்சங்கத்தை சேர்ந்த இஸ்மாயில் ஆரூண், நிர்வாகிகள் கண்ணுச்சாமி, முத்துக்கண்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்