கொட்டாம்பட்டி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 7 குழந்தைகள் காயம்

கொட்டாம்பட்டி அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 7 குழந்தைகள் காயம் அதிக வேகமாக சென்றதால் விபத்து.

Update: 2017-08-16 22:00 GMT

கொட்டாம்பட்டி,

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ளது செவன்த்டே என்ற தனியார் பள்ளி. இங்கு கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரம், தேத்தாம்பட்டி, வீரசூடாமணிபட்டி, கச்சிராயன்பட்டி, மணப்பட்டி பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள், குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களை அழைத்து வர பள்ளி சார்பில் வேன் இயக்கப்படுகிறது. வழக்கம் போல நேற்று மாலையில் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள், குழந்தைகள் வேனில் வீட்டிற்கு சென்றனர்.

அவர்களில் பெரும்பாலானோரை வீடுகளில் இறக்கி விட்டு, மீதம் இருந்த குழந்தைகளுடன் சென்ற வேன் கொட்டாம்பட்டி அருகே நான்கு வழி சாலையில் உள்ள வஞ்சிநகரம்–தேத்தாம்பட்டி விலக்கு அருகே அதிக வேகமாக சென்று திரும்பியது. அப்போது, நிலை தடுமாறிய வேன் திடீரென சாலையின் ஓரத்தில் தலை கீழாக கவிழ்ந்தது. அதில் வேனின் அடியில் சிக்கிக் கொண்ட குழந்தைகள் அலறினர். அந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து கொட்டாம்பட்டி போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து ஊழியர்களின் உதவியுடன் குழந்தைகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

அதில் ஆகாஷ், விஷால், கவின்சிங், யுவராஜ், யோகேஷ், மற்றொரு ஆகாஷ், விஷ்வகனி ஆகிய 7 குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் ஆய்வு செய்தார். இந்த விபத்து குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிக வேகமாக வேன் வந்ததால், கவிழ்ந்தது என்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொட்டாம்பட்டி போலீசார், வேனை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய வேன் டிரைவர் ஈஸ்வரன், கினீனர் ராஜா ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்