சிறுமியை நரபலி கொடுத்த பெண் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை
யவத்மால் அருகே சிறுமியை நரபலி கொடுத்த பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
யவத்மால்,
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம் கதான்ஜி கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி சாரதா. இந்த தம்பதிக்கு சப்னா என்ற 7 வயது மகள் இருந்தாள். இதே கிராமத்தை சேர்ந்த பெண் துர்கா. இவர் பில்லி, சூனியம் செய்து வந்தார். மேலும், தனக்கு தெய்வத்தின் அருள் இருப்பதாகவும், தான் வணங்கும் தெய்வம் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதால், அதனை சாந்தப்படுத்த நரபலி வேண்டும் என்றும் அருள் வாக்கு கூறினார்.
இதைத்தொடர்ந்து, துர்காவின் உறவினர்கள் சிலர், சிறுமி சப்னாவை கடத்தி, நரபலி கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி, சம்பவத்தன்று மாலை நேரம் இருள் சூழ்ந்த வேளையில், சப்னா தனது வீட்டருகே விளையாடி கொண்டிருந்த போது, அவளை கடத்தி யசோதாபாய் என்ற பெண்ணின் வீட்டுக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிறுமியின் முகத்தை துணியால் மூடி, பூஜை செய்தனர்.
உடலை புதைத்தனர்
பின்னர், ராமச்சந்திரா என்பவர், சப்னாவின் தலையை அரிவாளால் வெட்டினார். இதனால், தலை துண்டிக்கப்பட்டு சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தாள். இதைத்தொடர்ந்து, அவளது ரத்தத்தை ஆங்காங்கே தெளித்தனர். பின்னர், சப்னாவின் தலை, உடல் உள்ளிட்ட பாகங்களையும், பூஜைக்கு பயன்படுத்திய பொருட்களையும், யசோதாபாயின் வீட்டுக்கு வெளியே குழிதோண்டி புதைத்தனர்.
ஒரு மாதம் கழித்து உடலை தோண்டி எடுத்து, மற்றொருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புதைத்தனர். பின்னர், துர்காவின் அருள் வாக்குப்படி மிஞ்சிய எலும்பையும், மண்டை ஓட்டையும் தோண்டி எடுத்து, அங்குள்ள புதரில் வீசினர். மராட்டியத்தையே அதிர்ச்சி அடைய செய்த இந்த சம்பவம் கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி நடைபெற்றது.
8 பேர் கைது
இதனிடையே, மகளை காணாமல் பரிதவித்த பெற்றோர், உள்ளூர் போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி தகவல் தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியை நரபலி கொடுத்த பெண்கள் துர்கா, யசோதாபாய் மற்றும் மனோஜ், தேவிதாஸ், யாதவ்ராவ், புனாஜி, ராமச்சந்திரா, மோதிராம் ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்து, யவத்மால் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணையின் போது, 13 பேர் ஆஜராகி சாட்சி அளித்தனர்.
தூக்கு தண்டனை
விசாரணை நிறைவடைந்த நிலையில், மேற்படி 8 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி ஏ.எஸ்.வாக்மரே அறிவித்தார். தண்டனை விவரம் மீது நேற்று முன்தினம் வாதம் நடந்தது.
அப்போது, சிறுமியை கொடூரமாக நரபலி கொடுத்த குற்றத்துக்காக யசோதாபாய், மனோஜ், தேவிதாஸ், யாதவ்ராவ், புனாஜி, ராமச்சந்திரா, மோதிராம் ஆகிய 7 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். நரபலிக்கு உடந்தையாக இருந்த மந்திரவாதி துர்காவுக்கு 5 ஆண்டுகள் கடும்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 8 பேரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
சிறுமியை நரபலி கொடுத்த வழக்கில் பெண் உள்பட 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.