புதுவை–கடலூர் இடையே புதிதாக 100 அடி அகல சாலை முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுவை கடலூர் இடையே புதிதாக 100 அடி சாலை அமைக்கப்பட உள்ளது என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி,
உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
லாஸ்பேட்டையில் ரூ.6 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம் விரைவில் திறக்கப்பட உள்ளது. புதுச்சேரி சாரதாம்பாள் நகரில் ரூ.9 கோடி செலவில் சர்வதேச தரத்திலான நீச்சல் குளம் கட்டப்பட உள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.33.16 கோடி சென்டாக் நிதியுதவி வழங்கப்பட்டதில் 830 மருத்துவ மாணவர்களும், 5,643 பொறியியல் மாணவர்களும், 535 செவிலிய மாணவர்களும் பயனடைந்துள்ளனர்.
பாரதிதாசன் கல்லூரியை நவீனப்படுத்த மத்திய அரசு ரூசா திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதே திட்டத்தின்கீழ் ராஜீவ்காந்தி கலை கல்லூரி, தாகூர் கலைக்கல்லூரிகளுக்கும் பழுதுபார்த்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் கல்லூரிகளின் தரத்தை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கணக்கெடுத்ததில் புதுச்சேரி கல்லூரிகள் 6–ம் இடம் பிடித்துள்ளன.
புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக மருத்துவ மேற்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுள்ளோம். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வெவ்வேறு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு 279ம், நடப்பு ஆண்டில் 765ம் இளநிலை மற்றும் முதுநிலை சேர்க்கை இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவையில் முன்னேறிய மாநிலமாக புதுச்சேரி விளங்கி கொண்டிருக்கிறது.
கடந்த ஆண்டில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர்கள் உயர்நிலை மருத்துவமனைகளில் சிறப்பு நிலை சிகிச்சை பெறுவதற்காக 587 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 77 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடியே 87 லட்சம் செலவில் பல்வேறு நவீன மருத்துவ கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மருத்துவ நிதியுதவி பெற வருமான உச்சவரம்பு ரூ.1½ லட்சமாகவும், நிதியுதவியின் அளவு ரூ.2½ லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அரசின் தொடர் முயற்சியால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரியை மத்திய அரசு தேர்வு செய்து ரூ.1850 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அம்ருத் திட்டத்தின்கீழ் மாநில பணி முகமை உருவாக்கப்பட்டு புதுச்சேரி, உழவர்கரை மற்றும் காரைக்கால் நகராட்சிகளில் வலைதளங்கள் உருவாக்கப்பட உள்ளன. மாகி திறந்தவெளி கழிப்பிடமற்ற நகராட்சி என அறிவிக்கப்பட்டுள்ளதைப்போல், மற்ற நகராட்சிகளையும் மார்ச் 2018க்குள் அறிவிக்க முன்மொழியப்பட்டுள்ளது. கழிவறை திட்டத்தின்கீழ் 1806 பயனாளிகளுக்கு ரூ.3கோடியே 61 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 3,700 பயனாளிகளுக்கு முதல் தவணையாக ரூ.3 கோடியே 70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு புதுச்சேரி நகரின் குடிநீர் தேவை 122 மில்லியன் லிட்டராக இருந்தாலும், 112 மில்லியன் லிட்டர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளில் குடிநீர் தேவை 191 மில்லியன் லிட்டராக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே நீர் ஆதாரத்தை பெருக்குவது அவசர தேவையாக உள்ளதால் நகரம் மற்றும் புறநகர பகுதிகளுக்கான குடிநீர் ஆதார அபிவிருத்தி மற்றும் மேம்படுத்தலுக்கான திட்டத்திற்கு பிரான்ஸ் நாட்டின் ஏ.எப்.டி. வளர்ச்சி நிறுவனத்துடன் ரூ.1,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் குடிநீர் 191 மில்லியன் லிட்டராக உயர்த்தி வழங்க முடியும்.
100 அடி சாலையின் ரெயில்வே மேம்பாலம் கிழக்குப்பகுதி கடந்த 28–ந் தேதி திறக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தின் அனைத்து பணிகளும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். இதுபோல் அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலமும், உப்பனாற்றின் மீது கட்டப்பட்டு வரும் மேம்பாலமும் விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய போக்குவரத்து கொள்கையை அரசு வெளியிட்டுள்ளது. மாநில அரசு கேட்டுக்கொண்டதன்படி கிழக்கு கடற்கரை சாலைக்கு இணையான வழியில் ரெயில் பாதை அமைக்க பெருங்குடி–புதுச்சேரி–கடலூர் ரெயில்வே திட்டத்திற்கு ரெயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கு தமிழக அரசின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு இந்த ரெயில் பாதை இருவழி ரெயில் பாதையாகவும், அதனை ஒட்டியே புதுச்சேரி–கடலூர் இடையே புதிதாக 100 அடி அகல சாலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணி துரிதமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். மேலும் விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம் இடையே 4 வழிப்பாதை அமைக்கும் பணிகளும் தொடங்கி விட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.