புதுச்சேரியில் இருந்து சரக்கு ஆட்டோவில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து சரக்கு ஆட்டோவில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், 3 பேரை கைது செய்தனர்.

Update: 2017-08-15 22:45 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாருர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின் பேரில், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் முன்னிலையில், தினமும் திருத்துறைப்பூண்டி பகுதியில் வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கச்சனம் பகுதியில் ஆலிவலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, வினோத்ரவிராஜ், ஞானபண்டிதன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகை சாலையில் இருந்து வந்த சரக்கு ஆட்டோ, போலீசாரை கண்டவுடன் திரும்பி சென்றது. உடனே மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் தமிழார்வனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர், 5 கி.மீ. தூரம் விரட்டி சென்று சரக்கு ஆட்டோவை பிடித்தார்.

மதுபாட்டில்கள் கடத்தல்

இதையடுத்து போலீசார் அந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 1,464 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இந்த மதுபாட்டில்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சரக்கு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், காரைக்கால் மேட்டுத்தெரு கீழவெளியை சேர்ந்த ஜேம்ஸ் மகன் சாமுவேல் (வயது 26), காரைக்கால் டி.ஆர்.பட்டினம், முதலிமேடு வி.எஸ். நகரை சேர்ந்த முருகையன் மகன் ராஜசேகர் (32), காரைக்கால் தர்மபுரத்தை சேர்ந்த ரமேஷ் மகன் வீரமணிகண்டன் (30) என்பதும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு ஆட்டோ, ரூ.2 லட்சம் மதிப்பிலான 1,464 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த மதுபாட்டில்களை யாருக்கு விற்பனை செய்ய கொண்டு வரப்பட்டது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்