‘அ.தி.மு.க. பிரச்சினைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை” நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

“அ.தி.மு.க. கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பு இல்லை“ என்று நாகர்கோவிலில் அளித்த பேட்டியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2017-08-15 23:15 GMT

நாகர்கோவில்,

சுதந்திர தினத்தையொட்டி நேற்று நாகர்கோவிலில் உள்ள முகாம் அலுவலகத்திலும், மாவட்ட பா.ஜனதா அலுவலகத்திலும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் நாகர்கோவில் வடசேரியில் நடைபெற்ற தூய்மை இந்தியா திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று, வடசேரி பஸ் நிலையத்தை சுத்தம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

சுதந்திர போராட்ட முழக்கமான வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து பொதுமக்களிடையே எடுத்துக்கூறும் வகையில் பா.ஜனதா சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இந்த பேரணியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு நகர பா.ஜனதா இளைஞர் அணி தலைவர் சிவபிரசாத் தலைமை தாங்கினார். செயலாளர் சசி, சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ராஜன், முன்னாள் நகர்மன்ற தலைவி மீனாதேவ், பிரகலாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மோட்டார் சைக்கிள் பேரணி நாகர்கோவில் என்.ஜி.ஓ.காலனியில் இருந்து தொடங்கியது. முதல் ஆளாக பொன்.ராதாகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். பீச்ரோடு, செட்டிக்குளம், வேப்பமூடு சந்திப்பு, கோட்டார் சந்திப்பு, மீனாட்சிபுரம், மணியடிச்சான் கோவில் சந்திப்பு வழியாக பேரணி சென்று நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நிறைவடைந்தது.

அங்கிருந்து நடைபயணமாக பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் புறப்பட்டனர். அதற்கு போலீசார் முதலில் அனுமதி மறுத்தனர். ஆனால், பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து, வடசேரி அண்ணா சிலை வரை பா.ஜனதா கட்சியினர் நடந்து சென்றனர். அனைவரும் அங்கு சுதந்திர தினவிழா உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக வடசேரி பஸ் நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சுதந்திர தினத்தில் சாதி, மத பேதமற்ற இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திரமோடியின் சிறப்பான நிர்வாக திறமையால் உலக அளவில் வல்லமை மிகுந்த அரசாக இந்தியா உருவாகி உள்ளது.

முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசக்கூடிய வி‌ஷயத்தில் ஏதேனும் பொருள் இருக்கும். இதனாலேயே அவரை பிரதமர் நரேந்திரமோடி அடிக்கடி சந்திக்கிறார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும், மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மாநில வழி கல்வியில் படித்து, கடினமாக உழைத்து ‘நீட்‘ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் ‘நீட்‘ தேர்வு வேண்டும் என கேட்பதில் தவறு இல்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தமிழக அரசு கேட்கிறது. ஆனால் முன்பு வேண்டாம் என்று கூறிய பல்வேறு அரசியல் கட்சிகள் தற்போது நீட் தேர்வு வேண்டும் என கூறுகின்றன. பல்வேறு கட்சிகள் மாணவர்களின் எதிர்காலத்தை சிந்திக்காமல் அரசியல் செய்து வருகிறார்கள்.

மாணவர்களின் வாழ்கையில் விளையாட அரசியல் கட்சியினருக்கு எந்த உரிமையும் இல்லை. சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீண்டும் கொண்டு வந்தால் சட்டசபை கலவர பூமியாக மாறாமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் தண்ணீரை சேமித்து வைக்கும் வழியை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டுவரும் கழக ஆட்சிகள் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

குமரி மாவட்டத்தில் நேற்று நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம், ராஜாக்கமங்கலம், திங்கள்சந்தை, களியாக்கவிளை, இலவுவிளை, திக்கணங்கோடு உள்பட 10 இடங்களில் பா.ஜனதா கட்சியினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்தனர். ஆனால், நாகர்கோவில் தவிர மற்ற இடங்களில் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் தடையை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்