விருத்தாசலத்தில் ரெயில்வே ஊழியர்கள் 3 பேர் வீடுகளில் நகை–பணம் கொள்ளை

விருத்தாசலத்தில் நள்ளிரவில் ரெயில்வே ஊழியர்கள் 3 பேர் வீடுகளில் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-08-14 22:00 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் மெனாய் சீர்மீனா(வயது 42). இவர் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மெனாய் சீர்மீனா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று காலை அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு மெனாய் சீர்மீனா அதிர்ச்சி அடைந்தார். இதில் பதறிய மெனாய் சீர்மீனா உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள தொலைக்காட்சி பெட்டி மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதற்கிடையில் மெனாய் சீர்மீனாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த ரெயில்வே ஊழியரான பிரபாகரன்(40) என்பவர் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனே வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, செல்போன், ரூ.15 ஆயிரம் மற்றும் வெள்ளி கொலுசுகள், 1 கிராம் தங்க காசு ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீடுகளை பார்வையிட்டனர். அப்போது அதே குடியிருப்பில் வசித்து வரும் ரெயில்வே ஊழியர் கோவிந்தன்(58) என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 1 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மெனாய் சீர்மீனா, பிரபாகரன், கோவிந்தன் ஆகிய 3 பேரும் தங்களது வீடுகளை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரின் வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகள், செல்போன்கள், நகை, பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ரெயில்வே ஊழியர்கள் மெனாய் சீர்மீனா, பிரபாகரன், கோவிந்தன் ஆகியோர் விருத்தாசலம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம், தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே நாள் இரவில் ரெயில்வே ஊழியர்கள் 3 பேர் வீடுகளில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் எஸ்.ஆர்.எம்.யு. கிளை தலைவர் செல்வம் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் ஆகியோரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

விருத்தாசலம் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பலர் சுற்றித்திரிகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்குள் அமர்ந்து மதுபிரியர்கள் குடிக்கின்றனர்.

இதனால் ரெயில்வே குடியிருப்பில் வசிக்கும் ஊழியர்களின் குடும்பத்தினர் இரவு நேரத்தில் வீட்டில் இருக்கவே அச்சப்படுகின்றனர். மேலும் ரெயில்வே குடியிருப்பில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. அதனால் திருட்டு சம்பவத்தை தடுக்க சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிபவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்