சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்

சுதந்திரதினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பயணிகளின் உடமைகள் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் சோதனை செய்யப்பட்டன.

Update: 2017-08-14 23:00 GMT
வேலூர்,

இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) சுதந்திரதின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டம் முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விடுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

1,500 போலீசார்

வேலூர் கோட்டையிலும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்பட ரெயில் நிலையங்களிலும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனை பணிகளில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் ஈடுபட்டனர். பாதுகாப்பு கெடுபிடியால் பயணிகள் சிரமமடைந்தனர்.

மாவட்டத்தின் முக்கிய ரெயில் நிலையமான காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்து சென்ற அனைத்து ரெயில்களிலும் பெட்டி, பெட்டியாக சென்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதியிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்