ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி ‘திடீர்’ சாவு

ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி திடீரென்று இறந்தார். இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2017-08-14 23:15 GMT
ஆலங்குளம்,

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளத்தை சேர்ந்தவர் பழனி(வயது 40). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி ஆலங்குளத்தில் நடந்த முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ் கொலை வழக்கிலும் இவர் குற்றவாளி ஆவார். ஏற்கனவே குண்டர் சட்டத்திலும் கைதானவர்.

நேற்று முன்தினம் இரவு பழனி ஆலங்குளம் அம்பை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொள்ளையடிக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த காவலாளி சத்தம் போட்டதால், பழனி அங்கிருந்து காரில் தப்பி சென்று விட்டார்.

அதன்பிறகு ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டதால் அங்கிருந்தும் தப்பி சென்று விட்டார்.

இந்த நிலையில், மாறாந்தை- நாலாங்குறிச்சி ரோட்டில் ஆலங்குளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் பழனி வந்து கொண்டிருந்தார். அந்த காரை வழிமறித்து நிறுத்திய போலீசார், பழனியை பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு கைதிகள் அறையில் பழனியை போலீசார் அடைத்து வைத்து இருந்தனர்.

அங்கு நேற்று காலை 7 மணியளவில் திடீரென்று பழனிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பழனி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சகாயஜோஸ், தலைமையிடத்து கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், மதுவிலக்கு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மாதவன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே பழனியின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிச்சைராஜன் பார்வையிட்டார்.

பழனி இறந்த தகவல் அறிந்ததும் அவரது தாயார் உடையம்மாள் ஆலங்குளம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதி திடீரென்று இறந்த சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்