பொதுமக்கள் திடீர் சாலைமறியல் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை

எடப்பாடியில் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2017-08-14 23:00 GMT
எடப்பாடி,

எடப்பாடி - பூலாம்பட்டி ரோட்டில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் நுழைவாயில் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எடப்பாடி - பூலாம்பட்டி மெயின்ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஒருசிலர் சாக்கடை கால்வாயை அடைத்து விட்டதால் சரிவர கழிவுநீர் செல்லாமல் சாக்கடையில் தேங்கி உள்ளதால் கொசு உற்பத்தியாவதுடன், சுகாதார சீர்கேடு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

ஆனால் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் வீட்டு வசதி வாரிய நுழைவாயிலில் கூடினர். பின்னர் கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த எடப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் சாலைமறியலில் ஈடுபட்டவர்களில் 5 பேரை போலீசார் ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பொதுமக்களின் கோரிக்கையின் மீது அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்து, அவர்களை அனுப்பி வைத்தனர். இதையடுத்து பொதுமக்களும் கலைந்து சென்றனர். அதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்