புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்திய 3 போலீஸ்காரர்கள் கைது

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் மதுபாட்டில்கள் கடத்திய 3 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-08-14 22:00 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார் சந்தேகத்தின் பேரில் வழிமறித்து சோதனை செய்தனர். அந்த காரினுள் 111 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் சென்னை திருவான்மியூரை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன் (வயது 25) மற்றும் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த பாலமுருகன் (26), மதுரை வாடிப்பட்டி சுரேந்திரன் (27), திருமங்கலத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன் (24) என்பதும், வெங்கடேசன் தவிர மற்ற 3 பேரும் ஆயுதப்படை போலீஸ்காரர்கள் என்பதும் தெரியவந்தது.

சென்னையில் நடைபெறும் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்காக மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்தனர்.

பின்பு அவற்றினை கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க வேண்டிய போலீஸ்காரர்களே மதுபாட்டில்களை கடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்