தூத்துக்குடி அருகே என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளை

தூத்துக்குடி அருகே என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-08-14 23:00 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள தனசேகரன் நகர் 2–வது தெருவை சேர்ந்தவர் டென்சிங் (வயது 59). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். தற்போது இவர் தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டில் செல்வநயினார் மனைவி சிந்துஜா (27) வாடகைக்கு குடியிருந்து வருகிறார். செல்வநயினார் அபுதாபியில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். வீட்டில் சிந்துஜா மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த 11–ந்தேதி சிந்துஜா வீட்டை பூட்டிவிட்டு நாசரேத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்று காலையில் சிந்துஜா வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் சிந்துஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் நாசரேத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் மாடியில் உள்ள வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், அங்கு பணம் எதுவும் இல்லாததால் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி சென்றதும் தெரியவந்தது.

மர்மநபர்கள் சிந்துஜாவின் வீட்டில் இருந்து 35 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக சிந்துஜா சிப்காட் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்