கடை–குடோன்களில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 57 தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல்
தூத்துக்குடியில், கடை–குடோன்களில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 57 வாக்கி டாக்கிகளை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தநிலையில் தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில் எந்தவித உரிமமும் பெறாமல், போலீசார் பயன்படுத்தக்கூடிய தொலைதொடர்பு சாதனம்(வி.எச்.எப்.செட்) மற்றும் வாக்கி டாக்கிகளை விற்பனை செய்வதாக கியூ பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நேற்று தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் அந்த கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த கடையில் போலீசார் பயன்படுத்தக்கூடிய தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், செட்டாப் பாக்ஸ், ஜி.பி.எஸ்.கருவிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
உடனடியாக போலீசார் கடை மற்றும், அருகில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த போலீசார் பயன்படுத்தக்கூடிய 13 மோட்டோரோலா வி.எச்.எப். செட், 2 வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட 57 தொலை தொடர்பு சாதனங்கள், எலக்ட்ரானிக் உதிரி பாகங்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளர் தூத்துக்குடி ஜெய்லானி தெருவை சேர்ந்த ஷேக்மீரான்(வயது 34), கடை ஊழியர்கள் புதுக்கோட்டை பவானி நகரை சேர்ந்த தாஜூதின்(26), மேலூர் பங்களா தெருவை சேர்ந்த காஜாமைதீன்(42) ஆகியோர் மீது உரிமம் பெறாமல் தொலைதொடர்பு சாதனங்களை விற்பனை செய்தாக வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகஜோதி, மத்திய உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், டெல்லி, குஜராத் உள்ளிட்ட இடங்களில் இருந்து ‘ஆன்லைன்‘ மூலம் அந்த தொலை தொடர்பு சாதனங்களை வாங்கி உள்ளனர். அந்த சாதனங்களை தூத்துக்குடியில் எந்தவித உரிமமும் பெறாமல் விற்பனை செய்து உள்ளனர். இந்த சாதனங்களை கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் விற்பனை செய்து வருவது தெரிய வந்து உள்ளது.
இவர்கள் யார், யாருக்கு விற்பனை செய்தார்கள்? அவர்கள் என்ன உபயோகத்துக்காக இந்த தொலை தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர்? என்பது போன்ற விவரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள தொலைதொடர்பு சாதனம்(வி.எச்.எப். செட்) பயன்படுத்துவதற்கு வயர்லெஸ் பிளானிங் கமிட்டியில் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அனுமதி பெறும்போது, விற்பனை செய்யப்படும் வயர்லெஸ் கருவிகள் அனைத்தும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும்.
ஆனால் தற்போது அனுமதி பெறாமல் விற்பனை செய்து இருப்பதால், இந்த சாதனங்கள் சமூகவிரோதிகளின் கைகளுக்கு சென்று இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில், கடை–குடோன்களில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த தொலைதொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.