விமானப்படையில் பயிற்சியுடன் அதிகாரி பணி ஆண் - பெண் இருபாலரும் சேரலாம்

விமானப்படையில் ‘கமிஷன்டு ஆபீசர்’ பணியிடங்களுக்கு முதுகலை பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். ஆண்- பெண் இருபாலருக்கும் வாய்ப்பு உள்ளது.

Update: 2017-08-14 08:30 GMT
இந்திய விமானப்படை, நமது நாட்டின் வான்வழி பாதுகாப்பு ராணுவ அரணாகும். இந்த படைப்பிரிவில் “கமிஷன்டு ஆபீசர்’ கோர்ஸ் காமென்சிங் - ஜூலை 2018” என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் உயரதிகாரி பணிகளுக்கு ஆண்-பெண் முதுகலை பட்டதாரிகள் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்கு பின்னர் அதிகாரியாக பணி நியமனம் பெறலாம். இது பெர்மனன்ட் கமிஷனின் கீழ் வரும் நிரந்தர பணியிடங்களாகும். இதேபோல ஷாட் சர்வீஸ் கமிஷன் பிரிவில் தொழில்நுட்பம் சாராத அலுவலக பணியிடங்களுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

இந்த பணிகளில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை தெரிந்து கொள்வோம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2018 தேதியில் 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது 2-7-1994 மற்றும் 1-7-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர் களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. பைலட் லைசென்சு பெற்றவர்கள் 26 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

கணிதம், புள்ளியியல், புவியியல், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், என்விரான்மென்டல் சயின்ஸ், அப்ளைடு பிசிக்ஸ், ஓசனோகிராபி, மெட்டோராலஜி, அக்ரிகல்சரல், ஈகாலஜி, ஜியோபிசிக்ஸ், என்விரான்மென்டல் பயாலஜி போன்ற கலை அறிவியல் பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி:

ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157.5 சென்டிமீட்டர் உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு, பார்வைத்திறன், உடல் ஆரோக்கியம் -உள நலம் போன்றவை விமானப் படைக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா? என்பது பரிசோதிக்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்களுக்கு ஸ்டேஜ்-1 தேர்வில் நுண்ணறிவுத்திறன் சோதிக்கப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். பிறகு ஸ்டேஜ்-2 தேர்வில் உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்காணல் நடைபெறும். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின் ஒரு வருட பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-8-2017-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை பிற்கால உபயோகத்திற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணையதள முகவரி www.careerairforce.nic.in

மேலும் செய்திகள்