ரூ.2½ கோடியில் கட்டப்பட்ட புதிய தடுப்பணை நிரம்புகிறது

அமிர்தி–நஞ்சுகொண்டாபுரம் ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை மூலம் ரூ.2½ கோடி மதிப்பில் 8½ அடி உயரம், 90 அடி அகலம் கொண்ட புதிய தடுப்பணை கட்டப்பட்டது.

Update: 2017-08-13 23:11 GMT

கணியம்பாடி,

அமிர்தி–நஞ்சுகொண்டாபுரம் ஆற்றின் குறுக்கே பொதுப்பணித்துறை மூலம் ரூ.2½ கோடி மதிப்பில் 8½ அடி உயரம், 90 அடி அகலம் கொண்ட புதிய தடுப்பணை கட்டப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை ஜவ்வாது மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அமிர்தி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைக்கு முதன்முறையாக தண்ணீர் வந்தது.

அதைத்தொடர்ந்து கணியம்பாடி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ராகவன், நஞ்சுகொண்டாபுரம் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் அணையில் பெருகிய தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர். பின்னர் தடுப்பணை கரையோரம் ஆடுபலியிட்டு, சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில் துத்திக்காடு முன்னாள் தலைவர் ஜெயசீலன், கீழ்அரசம்பட்டு முன்னாள் தலைவர் சரோஜா ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் நஞ்சுகொண்டாபுரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, அப்பகுதியில் உள்ள ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. வெள்ளப்பெருக்கால் விரைவில் தடுப்பணை நிரம்பும். இத்திட்டம் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்ததின் பேரில் நிறைவு பெற்றது என நஞ்சுகொண்டாபுரம் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்